கல்விக் கொள்கையில் மதில் மேல் பூனை போல் திமுக அரசு நிற்பதாகவும், ஆட்சிக்கு வரும் முன்பு ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பின் ஒரு நிலைப்பாடு என திமுக இரட்டை வேடம் போடுவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
தமிழக அரசையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் விமர்சித்து ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது தேசியக் கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுவதை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டுமென்று பிரதமருக்கு கடிதம் எழுதியவர் ஸ்டாலின். புதிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வரும் சமூக நீதி மற்றும் மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு கூறுகளை அழித்தொழிப்பதாக அமைந்துள்ளதால் அதனை தி.மு.க. முற்றிலும் நிராகரிக்கிறது என்றும், தமிழகத்திற்கு என மாநில கல்விக் கொள்கை உருவாக்க கல்வியாளர்கள் குழு அமைக்கப்பட்டு, மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உறுதி தரப்பட்டது. இவையெல்லாம் அந்தக் காலம். அதாவது, தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த காலம், தி.மு.க. தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலம். தி.மு.க. ஆளுங்கட்சியாக மாறிய பிறகு, புதியக் கல்விக் கொள்கையில் அதன் நிலைப்பாடு கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக மாறிவிட்டது.
2021 அக்டோபர் மாதத்தில், மாநிலக் கல்விக் கொள்கையை வகுக்க வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார் முதலமைச்சர். 2021 டிசம்பர் மாதத்தில், தேசியக் கல்விக் கொள்கையில் இருக்கின்ற நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு நாங்கள் கண்டிப்பாக செய்வோம் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கூறினார். தேசியக் கல்விக்கொள்கையை தி.மு.க. அரசு எதிர்த்தாலும், மறைமுகமாக ‘இல்லம் தேடி கல்வி’, ‘நான் முதல்வர்’ போன்ற திட்டங்கள் மூலம் தேசியக் கல்விக் கொள்கையின் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் தெரிவித்து இருந்தார். இவையெல்லாம் இந்தக் காலம். அதாவது, மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கின்ற காலம்.
தி.மு.க.வின் இரட்டை வேடத்தை நிரூபிக்கும் வண்ணம் மாநிலக் கல்விக் கொள்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். மாநில அரசின் கல்விக் கொள்கை என்பது தேசிய கல்விக் கொள்கையின் மறுவடிவமாகவே உருவாகிறது என்று தி.மு.க.-வால் நியமனம் செய்யப்பட்ட குழு ஒருங்கிணைப்பாளர் கூறியிருக்கிறார். மேலும் அவர் குறிப்பிடுகையில், அரசாணைப்படி இலக்குகளை அடைய பணிகளை மேற்கொண்டபோது, வலுக்கட்டாயமாக சில நிபந்தனைகள் தன்மீது திணிக்கப்படுவதாகவும், தனக்கு அழுத்தம் தரப்படுவதாகவும் முதலமைச்சரின் செயலாளர் மீது குற்றம் சுமத்தியிருக்கிறார்.
மாநிலக் கல்விக் கொள்கைக்காக ஓர் உயர்மட்டக் குழுவை அமைத்துவிட்டு, அதனை மிரட்டுவது என்பது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல். இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன்மூலம் தேசியக் கல்விக் கொள்கையில் தி.மு.க.விற்கு உடன்பாடு இருக்கிறது என்பதும், தேர்தலில் வெற்றி பெற வேண்டுமே என்பதற்காக தேசியக் கல்விக் கொள்கையை எதிர்ப்பது போல் நாடகமாடியது என்பதும் தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தான் தி.மு.க.வின் உண்மையான சுயரூபம். மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்படுமா அல்லது தேசியக் கல்விக் கொள்கை பின்பற்றப்படுமா என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.