மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியைக் கேட்காததால் நானும் தண்டிக்கப்படுவேனா: மஹூவா மொய்த்ரா!

பிரதமர் மோடியின் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியைக் கேட்காததால் நானும் தண்டிக்கப்படுவேனா, வீட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்படுமா என்று திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தேசிய செவிலியர் கல்வி நிறுவனத்தில் பயிலும் 36 மாணவிகள் பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்காததற்காக அவர்கள் விடுதியில் இருந்து ஒரு வாரத்திற்கு வெளியே செல்ல தடைவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் 100வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியை (ஏப்.30 அன்று ஒலிபரப்பான நிகழ்ச்சி) கட்டாயம் கேட்க வேண்டும் என்று முதுகலை மருத்துக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தேசிய செவிலியர் கல்வி நிறுவனங்களுக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்திருந்தது. “பிரதமரின் வானொலி உரையினை மாணவிகள் கட்டாயம் கேட்க வேண்டும். வல்லுநர்கள் மற்றும் அறிஞர்களை அழைத்து வந்து நடத்தும் கவுரவ விரிவுரையின் ஒரு பகுதி இது. எனவே, மாணவிகள் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூன்றாம் ஆண்டு மாணவிகள் 28 பேர், முதலாமாண்டு மாணவிகள் 8 பேர் என 36 பேர் பிரதமரின் உரையை புறக்கணித்திருந்தனர். இதனால் அந்த மாணவிகள் ஒரு வாரத்திற்கு விடுதியில் இருந்து வெளியேறக்கூடாது என்று நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதுகுறித்து திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியை நான் இதுவரை கேட்டதே இல்லை. ஒரு முறை கூட கேட்கவில்லை. இனி கேட்கப் போவதுமில்லை. எனக்கும் தண்டனை வழங்கப்படுமா? என் வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடைவிதிக்கப்படுமா? இப்போது கவலையாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். இத்துடன் மாணவிகளுக்கு தண்டனை வழங்கப்பட்ட செய்தியினையும் பகிர்ந்துள்ளார்.