ஜீரோவும், ஜீரோவும் இணைந்தால் ஜீரோதான் வரும்: எடப்பாடி பழனிசாமி

ஜீரோவும், ஜீரோவும் இணைந்தால் ஜீரோதான் வரும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம், ஓமலூரில் உள்ள புறநகர் அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலிருந்து திமுக, தேமுதிக, பாமக, அமமுக உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி, நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஓபிஎஸ், தி.மு.க-வுக்கு பி டீமாகச் செயல்படுகிறார் என்று கூறியிருந்தேன். அது நிரூபணமாகிவிட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சி.எஸ்.கே டீம் விளையாடியபோது, ஓபிஎஸ் மேட்ச் பார்க்கச் சென்றிருந்தார். போனவர் மேட்ச் மட்டும் பார்த்தால் பரவாயில்லை. அங்கு சென்று ஸ்டாலின் மருமகன் சபரீசனைச் சந்தித்திருக்கிறார். இதிலிருந்தே தெரிகிறது, ஓபிஎஸ் தி.மு.கவின் கைக்கூலி என்பது. ஜீரோவும், ஜீரோவும் இணைந்தால் ஜீரோ வருவதுபோல் தான் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைப்பு உள்ளது. டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் இணைந்தது மாயமானும், மண் குதிரையும் சேர்ந்ததுபோல் இருக்கிறது. டிடிவி தினகரனின் அமமுக காலியாகி வருகிறது. டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் சந்திப்பானது காலியான கூடாரத்தில் ஒட்டகம் புகுந்ததைப் போன்ற நிலைதான். பண்ருட்டி ராமச்சந்திரன் எந்த கட்சிக்கும் விஸ்வாசமாக இருந்ததில்லை.

என்மீது ஏற்கெனவே ஆர்.எஸ்.பாரதி பொய் வழக்கு தொடர்ந்தார். டென்டரில் முறைகேடு என்று வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையிலிருந்தபோது வழக்கை திரும்பப் பெற்றனர். இவர்கள் செய்த ஊழல்களை மறைப்பதற்காக எங்கள் மீது வழக்கு போட்டு வருகின்றனர். எந்தவித உண்மையும் இல்லை. அ.தி.மு.க ஆட்சி சிறப்பான ஆட்சி என்பதை நிரூபித்திருக்கிறோம்.

திமுக ஆட்சியின் ஊழலின் வெளிப்பாடுதான் தற்போது நடந்திருக்கும் அமைச்சரவை மாற்றம். அப்படி இல்லாவிட்டால் ஏன் அமைச்சரவை மாற்றம் செய்யப்படுகிறது? ஒரே ஒரு ஆடியோவால் அரசாங்கம் ஆடிப்போய்விட்டது. ஒரு விக்கெட் போய்விட்டது, அமைச்சரவை ஆடிப்போயிருக்கிறது. திமுக ஆட்சியின் இரண்டாண்டு கால ஆட்சியில் ஊழலைத் தவிர வேற எதுவும் செய்யவில்லை. எல்லா துறைகளிலும் ஊழல்தான் நிறைந்திருக்கிறது. இதற்கு சான்றாகத்தான் நிதியமைச்சர், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் முப்பதாயிரம் கோடி ரூபாயை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாக, நிதியமைச்சர் பேசிய ஆடியோதான் தமிழக அமைச்சரவை மாற்றத்துக்கான காரணம். இன்னும் நிறைய ஆடியோக்கள் வரும் என்று சொல்லியிருக்கின்றனர். அவ்வாறு வந்தால் நிறைய செய்திகள் கிடைக்கும். இரண்டு ஆண்டுகளில் திமுக செய்த சாதனை 30,000 கோடி ரூபாய் கொள்ளையடித்தது தான். இன்னும் அமைச்சரவையிலிருந்து பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை நீக்கியிருந்தால், இன்னும் நிறைய செய்திகள் வந்துவிடும், பணம் எங்கெங்கு இருக்கிறது என்று சொல்லிவிடுவார் என்ற பயத்தால்தான், துறையை மட்டும் மாற்றி அவரை அமைச்சரவையிலேயே வைத்திருக்கின்றனர். ஆளுநரை நாங்கள் சந்திக்கும் போது இது பற்றி விளக்கமாக தெரிவிப்போம்.

அதுமட்டுல்லாமல் ஆவினில் நிறைய முறைகேடுகள் நடந்திருக்கின்றன. அதிகார துஷ்பிரயோகம் நடைபெற்றிருக்கிறது. இதனால் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டு, விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகக் கூறியிருந்தோம். அதை யாரும் கண்டுகொள்ளவில்லை, அதையெல்லாம் உண்மை என்று நிரூபிக்கும் விதமாக திமுக அரசாங்கம் பால்வளத்துறை அமைச்சர் நாசரை நீக்கியிருக்கிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தல் வேட்பு மனுவில் சொத்துகளை குறைத்து காட்டியதாக புகார் எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “என் பெயரில் எந்தச் சொத்தும் கிடையாது, எந்தச் சொத்தையும் நான் என் பெயரில் வாங்கவில்லை. வருவாய் குறைவாக காட்டியுள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள். என்ன இருக்கிறதோ அதை தான் காட்டியுள்ளேன். நான் எந்த தொழிலும் செய்யவில்லை விவசாய மட்டும் தான் செய்கிறேன். எந்த சொத்தையும் மறைக்கவில்லை. அரசியல்ரீதியாக என்னை எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் தற்போது என்மீது புகார் தெரிவித்திருக்கும் மிலானி, தி.மு.கவைச் சேர்ந்தவர். அந்தக் கட்சியின் தூண்டுதலின்பேரில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இது முழுக்க முழுக்க விதிமீறல் வழக்கு. தேர்தல் விதிமீறல் வழக்கு தொடர்ந்தால் ஒரு வருடத்தில் தொடர வேண்டும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தொடரப்பட்டிருக்கிறது. அதுமட்டும் இல்லாமல், இந்த வழக்கு என் தொகுதியான, எடப்பாடி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தான் வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஆனால் சேலத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே இதனை சட்டப்படி சந்திப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.