மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த குஜராத் நீதிபதி எச்.எச். வர்மா உள்ளிட்ட 68 நீதிபதிகளின் பதவி உயர்வுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
2019-ம் ஆண்டு கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்த ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்தார். இது மோடி சமூகத்தினரை இழிவுபடுத்திவிட்டது என்பது அவதூறு வழக்கு. இவ்வழக்கில் திடீரென விசாரணை நடத்தப்பட்டு ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ராகுல் காந்தியின் எம்பி பதவியும் உடனே பதவி பறிக்கப்பட்டது. ராகுல் காந்திக்கு ஒதுக்கப்பட்ட டெல்லி பங்களாவும் பறிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தினர். நாடாளுமன்ற இரு சபைகளையும் முடக்கினர். அத்துடன் ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட வயநாடு லோக்சபா தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது. இத்தொகுதிக்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது. ராகுல் காந்தி தமக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக குஜராத் சூரத் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் அம்மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார்.
இதனிடையே ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிபதி எச்.எச்.வர்மா உள்ளிட்டோருக்கு பதவி உயர்வு வழங்கியது குஜராத் உயர்நீதிமன்றம். நீதிபதிகளுக்கான பதவி உயர்வுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் எச்.எச்.வர்மா உள்ளிட்ட 68 பேருக்கு குஜராத் உயர்நீதிமன்றம் பதவி உயர்வு கொடுத்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சிடி ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், பதவி உயர்வு தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. இத்தகைய பதவி உயர்வு அறிவிக்கை சட்டவிரோதமானது; நீதிபதிகளின் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது என அதிரடியான உத்தரவை பிறப்பித்தனர்.