ஆரம்பக்கல்வி அவர்களின் தாய்மொழியில் வழங்கவேண்டியது அவசியம்: பிரதமர் மோடி

குழந்தைகளுக்கு ஆரம்பக்கல்வி அவர்களின் தாய்மொழியில் வழங்கவேண்டியது அவசியம். வாழ்நாள் முழுவதும் சமூக சூழ்நிலைகளை நுணுக்கமாக படிக்கும் மாணவனாக இருக்கிறேன் என்று பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடி இன்று தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு ஒருநாள் சுற்றுப்பயணமாக சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காந்தி நகரில் நடந்த விழாவில் ரூ. 4 ஆயிரத்து 400 கோடி மதிப்பில் மேற்கொள்ள இருக்கிற பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினார். மேலும் அங்கு நடைபெற்று வரும் திட்டப்பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நகர்ப்புற வளர்ச்சி துறை,குடிநீர் வடிகால் வாரிய துறை , சாலை மேம்பாட்டு துறை சார்பில் ரூ. 2,450 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் புதிதாக 19 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த வீடுகளுக்கான சாவிகளை பிரதமர் மோடி பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும் அகமதாபாத்தில் நடந்த அகில இந்திய கல்வி மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

காந்தி நகரில் அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது:-

மாணவர்களுக்கு முன்பு புத்தக அறிவை கொடுத்து வந்தோம். புதிய கல்விக்கொள்கை அறிமுகம் செய்யப்பட்டதும் அந்த நிலை மாறும். குழந்தைகளுக்கு ஆரம்பக்கல்வி அவர்களின் தாய்மொழியில் வழங்கவேண்டியது அவசியம். புதிய கல்விக்கொள்கையில் அதற்கான அம்சங்கள் இருக்கிறது. என் வாழ்நாளில் நான் ஆசிரியராக இருந்ததில்லை, ஆனால் வாழ்நாள் முழுவதும் சமூக சூழ்நிலைகளை நுணுக்கமாக படிக்கும் மாணவனாக இருக்கிறேன். உலக தலைவர்களை நான் சந்திக்கும்போது அவர்களில் சிலர், அவர்களின் ஆசிரியர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்தனர். இவ்வாறு அவர் பேசினார்.