ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை நேரடியாக பணியமர்த்த வேண்டும்: வேல்முருகன்

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை நேரடியாக பணியமர்த்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

2013 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று இன்னும் வேலை வாய்ப்பினைப் பெறாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் தேர்வுக்கான தகுதிச் சான்றிதழை ஆயுட்காலத் தகுதிச் சான்றிதழாக வழங்குவதற்குரிய சட்ட வழிவகைகள் குறித்து ஆராயப்படும் என இரண்டு வாக்குறுதிகள் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எண் 177-60 குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், வாக்குறுதிக்கு மாறாக, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

அதுமட்டுமின்றி, 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றபோது, ஆசிரியர் நியமனத்திற்கான வயது உச்ச வரம்பு 57 என்றிருந்தது. தற்போது இந்த வயது உச்சவரம்பு 42-ஆக குறைக்கப்பட்டுவிட்டது. இதன் காரணமாக, தகுதியுடைய பெரும்பாலான ஆசிரியர்கள் போட்டித் தேர்விற்கு விண்ணப்பிக்க தகுதி இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இத்தகைய நடவடிக்கை மிகுந்த கவலை அளிக்கிறது.

இந்நிலையில், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு இரு தேர்வுகள் கூடாது, ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை, போட்டித்தேர்வு நடத்தாமல், நேரடியாக பணியமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சென்னை பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில், தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு நடத்துவது கவலைக்குரியது; கண்டிக்கதக்கது.

தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 10 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் வாடி வரும் நிலையில், அதனை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ளவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. தேர்தல் வாக்குறுதிப்படி அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு. அதன் அடிப்படையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களை அழைத்துப் பேசி அவர்களுடைய கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்ற மாண்புமிகு முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.