கர்நாடகாவில் யார் ஜெயிச்சாலும் நமக்கு எதிராகவே இருப்பாங்க: சீமான்

கர்நாடகாவில் இரண்டு கட்சியின் வெற்றியும் ஒன்னுதான்..நமக்கு எந்த நன்மையும் கொடுக்கப்போவது இல்லை. இந்திய கட்சி, தேசிய கட்சி என்று சொல்வார்களே தவிர கர்நாடகா என்று வரும் போது மாநில கட்சியாகத்தான் இருப்பார்கள் என்று சீமான் விமர்சித்தார்.

சிவகங்கை மாவட்டம் அரணையூரில் செய்தியாளர்களை சந்தித்து சீமான் கூறியதாவது:-

கர்நாடகாவில் இரண்டு கட்சிகளும் தான் மாறி மாறி வருகின்றன. 5 ஆண்டு கால ஆட்சி ஒரு மாறுதல் வேண்டும் என மக்கள் நினைச்சிருக்கலாம். எங்களை பொறுத்தவரை இரண்டு கட்சியின் வெற்றியும் ஒன்னுதான்..நமக்கு எந்த நன்மையும் கொடுக்கப்போவது இல்லை. இந்திய கட்சி, தேசிய கட்சி என்று சொல்வார்களே தவிர கர்நாடகா என்று வரும் போது மாநில கட்சியாகத்தான் இருப்பாங்க.. அந்த மாநில நலனைத்தான் பேசுவார்கள். அதனால், ஒரு மாற்று என நினைத்து காங்கிரசை தேர்வு பண்ணி இருக்கலாம்.

இரண்டு பேருமே காவிரி நதி நீர் விவகாரத்தில் நமக்கு எதிராக இருப்பார்கள். மேகதாது அணையை இரண்டு பேருமே கட்டியே தீருவோம் என்பார்கள். அவர்களும் நிதி நிலை அறிக்கையில் 9 ஆயிரம் கோடி ஒதுக்குவோம் என்றிருக்கிறார்கள். இவர்களும் ஒதுக்குவோம் என்று இருக்கிறார்கள். வெற்றி தோல்வி… நமக்கு என்ன இருக்கும் ஒன்னும் இல்லை.

திமுக அமைச்சரவையில் இலாகா மாற்றுவது எல்லாம் அவர்கள் விருப்பம். அவர்கள் எந்த காயை எங்கே நகர்த்தி விளையாட வேண்டும் என்று நினைக்கிறார்களோ அப்படி விளையாடுகிறார்கள். இதில் நான் என்ன கருத்து சொல்ல முடியும். திமுகவின் இரண்டு ஆண்டு கால ஆட்சி அவர்கள் சொல்வது போலத்தான் இருக்கிறது. இதுபோல கேவலமான ஆட்சியை இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாது. எனவே ஈடு இணையில்லா ஆட்சிதான்.

வாக்குக்கு காசு கொடுக்காமல் வென்றவர் பிடிஆர். அவருக்கு குடும்ப பின்னணி இருக்கிறது. நீண்ட தொரு அரசியல் பாரம்பரியம் உள்ளது. பிடிஆர் சொல்லித்தான் வெளியில் தெரியவந்தது என்று சொல்வது எல்லாம் பயித்திகாரத்தனம். எல்லாருக்கும் தெரியும். தெரியாததை ஒன்றும் அவர் பேசவில்லை. அதனால்தான் நடவடிக்கை எடுத்ததாக நான் பார்க்கவில்லை. ஏதோ வெளியில் வந்து விட்டது. அதனால் மாற்றி விடுவோம் என மாற்ற்றியிருக்கிறார்கள்.

செல்லூர் ராஜூ சொல்வதற்காகத்தான் விஜய் அரசியலுக்கு வரப்போவது இல்லை. விஜய் அரசியலுக்கு விரும்பி வருகிறார். விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார். அதனால் வருகிறார். கமல்ஹாசன் வரும் போது எப்படி வாழ்த்தினோமோ அதுபோல விஜய் வரும் போதும் வாழ்த்துவோம். வரவேற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளுக்கு மூத்த தலைவர் வளர்மதி உள்ளிட்டோர் மண் சோறு சாப்பிட்டதை குறித்து பேசிய சீமான், உலகத்தில் முதன்முதல் பண்பட்ட இனம் அறிவார்ந்த தமிழ் சமூகம் அவ்வாறு செய்ய கூடாது. அதை வெளியில் இருந்து பார்ப்பவர்கள் நாகரிகம் இல்லாத கூட்டம் இன்னமும் இருக்கிறது என்று ஏளனம் செய்வார்கள். தலைவர்கள் இப்படி செய்ய கூடாது. மற்றவர்களுக்கு முன் மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டும். தட்டில் சோறு சாப்பிட்டாலே வராத நோய்கள் எல்லாம் வருகிறது. இதில், தரையில் சோறு போட்டு சாப்பிட்டால் என்ன ஆகும் என்ன நினைத்து பார்க்க வேண்டும் என்றார்.

ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பு குறித்து கேட்டதற்கு, அது வெறும் சந்திப்பு தான். கூட்டணி என்று நாம் எடுத்துக்கொள்ள கூடாது. நான்கூட மதிப்பு ரீதியாக டிடிவி தினகரனை சந்தித்துள்ளேன் என்று சீமான் கூறினார்.