தமிழகத்தில் உளவுத்துறை செயல்படுகிறதா, இல்லையா?: சிவி சண்முகம்

தமிழகத்தில் உளவுத்துறை செயல்படுகிறதா, இல்லையா என்பதும் தெரியவில்லை. அரசே சாராயத்தை விற்பனை செய்கிறது. தமிழகம் முழுவதும் போதையில் தள்ளாடிக் கொண்டு இருக்கிறது என்று அதிமுக எம்.பி சிவி சண்முகம் விமர்சித்தார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தை சேர்ந்தவர்கள் கள்ளச்சாரயம் குடித்து பலியானவர்களின் கும்பத்தினரை நேரில் சந்தித்து அதிமுக மாநிலங்களவை எம்.பி சி.வி சண்முகம் ஆறுதல் கூறினார். அதிமுக சார்பில் ரூ.25 ஆயிரம் நிதி உதவியும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிவி சண்முகம் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் அபின், கஞ்சா, போதை சாக்கலேட் தங்கு தடையின்றி விற்பனையாகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தடுக்க வேண்டிய காவல்துறையோ உறங்கிக் கொண்டு இருக்கிறது. பெருமளவு பணம், கையூட்டு பெற்றுக்கொண்டு காவல்துறை ஊக்குவிக்கிறது. தனது ஆட்சியில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் முதல்வர் மு.க ஸ்டாலின் இருக்கிறார். பாக்கெட் சாராயம் விற்பனை பற்றியும் அதன் விநியோகம் குறித்தும் போலீசாருக்கு நன்கு தெரியும். ஆனால், நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது.

திண்டிவனம் பகுதியில் இருந்து விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பாக்கெட் சாராயம் வினியோகிக்கப்படுகிறது. திண்டிவனம் 20 வார்டின் திமுக கவுன்சிலராக இருக்கும் பெண்ணின் கணவர்தான் சாராய விற்பனைக்கு காரணமாக இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பாக கைது செய்யப்பட்ட அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார். 20 நாட்களுக்கு முன்பாக 5 அயிரம் லிட்டர் அவர் வீட்டில் சாரயம், பாக்கெட்டுகள் உள்ளிடவற்றை கைது செய்தார்கள். ஆனால், சிறிய வழக்கு மட்டுமே போட்டு போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டு இருக்கிறார். திண்டிவனத்தில் வீட்டிலே தயாரித்து விற்பனை செய்கிறார். மூன்று முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு இருக்கிறார். யாருடைய அழுத்தத்தின் பேரில் அவர் விடுதலை செய்யப்பட்டார். எந்த அமைச்சர் அவருக்கு உடைந்தையாக இருக்கிறார்.

உளவுத்துறை செயல்படுகிறதா, இல்லையா என்பதும் தெரியவில்லை. அரசே சாராயத்தை விற்பனை செய்கிறது. தமிழகம் முழுவதும் போதையில் தள்ளாடிக் கொண்டு இருக்கிறது. இதுதான் இந்த அரசினுடை சாதனை. திமுகவினருக்கு சொந்தமாக 8 சாராய ஆலைகள் இருக்கிறது. கள்ளச்சாராய வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர்களுக்கு துணை போகும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.