முதல்வர் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் ஏற்பட்ட விஷ சாராய மரணங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த மீனவ கிராமமான எக்கியார் குப்பத்தில் சனிக்கிழமையன்று அமரன் என்பவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த சங்கர், சுரேஷ், தரணிவேல், மண்ணாங்கட்டி, ராஜமூர்த்தி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் அதை வாங்கி குடித்துள்ளனர். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால், புதுச்சேரி காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சுரேஷ், சங்கர், தரணிவேல், ராஜமூர்த்தி, மலர்விழி, மண்ணாங்கட்டி ஆகிய 6 பேரும் நேற்று உயிரிழந்தனர். மற்ற 20 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பெற்று வந்தவர்கள் அடுத்தடுத்து உயிரிழக்கவே பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே எதிர்கட்சியினர் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர் கள்ளச்சாரய மரணத்திற்கு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவழகன், விழுப்புரம் மதுவிலக்கு ஆய்வாளர் மரிய சோபி மஞ்சுளா, உதவி ஆய்வாளர்கள் தீபன், சிவகுருநாதன் ஆகிய 4 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக காவல்துறை உயரதிகாரிகள் கூறியுள்ளனர்.
கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். வனப்பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

கள்ளச்சாரய மரணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாட்டில் கள்ளச்சாரயம் ஆறாக பெருகி விட்டதாக குற்றம் சாட்டினார். 24 மணி நேரம் மது விற்பனை நடைபெறுவதாகவும் கூறிய அவர், விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்ததற்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற வேண்டும் என்று கூறினார். அப்பாவி மக்களின் மரணத்திற்கு தார்மீக பொறுப்பேற்று ஸ்டாலின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த துறையை சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். நாளை மரக்காணம் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூற உள்ளேன். கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது. விஷ சாராயம் குடித்து சுமார் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. கள்ளச்சாராயம் பெருகிவிட்டதாக சட்டபேரவையிலேயே நான் பேசினேன். முன்பே நடவடிக்கை எடுத்திருந்தால் விஷ சாராய மரணங்களை அரசு தடுத்து நிறுத்தியிருக்கலாம்.

தமிழகத்தில் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. கஞ்சா போன்ற போதைப் பொருட்களை தடை செய்ய முடியவில்லை. கஞ்சா ஒழிப்பு 2.0, 3.0 என ஓ போட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் 24 மணி நேரமும் டாஸ்மாக் கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. 500 கடைகளை மூடுவதாக சொல்லி 100 கடைகளை திறக்கிறார்கள். விளையாட்டு மைதானம், திருமண மண்டபத்தில் கூட மதுபானத்தை செய்யலாம் என அரசு கூறியுள்ளது. கள்ளச்சாராய மரணங்களுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.