10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற ஆர்வம் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் எழுந்து வந்த நிலையில், அதற்கான தேதியை தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், கடந்த ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை 3986 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டன. இந்த தேர்வினை சுமார் 9,96,089 மாணவ மாணவிகள் எழுதினர். அதேபோல, 11ம் வகுப்பு தேர்வுகளும் இதே சமயத்தில் நடந்து முடிந்தன. ஆனால், 10ம் வகுப்பு மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு எப்போது ரிசல்ட் வெளியிடப்படும் என தேதி அறிவிக்கப்படாமலேயே இருந்தது.. இதனிடையே, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் கடந்த 8ம் தேதி வெளியாகிவிட்டது. இதில், 8, 36,593 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 7,55,451 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றிருந்தனர்.. தேர்ச்சிப் பெற்றவர்களின் விகிதம் 94.03 ஆகும். மாணவர்களை விட மாணவிகளை கூடுதலாக தேர்ச்சிப் பெற்றிருந்தனர். மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 5.36% ஆக இருந்தது. இந்த பொதுத் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு வரும் ஜூன் 19ம் தேதி உடனடி சிறப்புத் துணைத்தேர்வு நடத்தப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. அனைத்து பாடங்களுக்கும் நடத்தப்படும் இந்த துணைத் தேர்வில் மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது விடைத்தாள் திருத்தும் பணியும், கடந்த ஏப்ரல் 24ம் தேதியே துவங்கிவிட்ட நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற ஆர்வம் எழுந்துகொண்டே இருந்தது. மே 17ல் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேர்வுத்துறை இயக்ககம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. ஆனால், தேர்வுத்துறை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.. இதற்கு பிறகு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் கடந்த வாரம் செய்தியாளர்கள் இதுகுறித்து எழுப்பியிருந்தனர்.. அதற்கு அவர், 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19 அன்று வெளியாகும் என்று கூறியிருந்தார்.. அப்படியானால், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், தேர்வுதுறை தரப்பில் சொன்னபடி, 17ம் தேதி வெளியாகுமா அல்லது அமைச்சர் சொல்வதுபோல், 19ம் தேதி வெளியாகுமா என்ற குழப்பம் மாணவர்களிடம் எழுந்தது.. இதற்கான உறுதியான அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

அதன்படியே, தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 19ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 11ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், அதே நாளில் பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நிலவி வந்த குழப்பத்துக்கு முடிவு கிடைத்துள்ளது.