ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தற்காலிகமாகத்தான் வழங்கப்பட்டு இருந்தது என்றும், அதனால்தான் அது ரத்து செய்ய முடிந்தது என்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
சட்ட முன்வடிவுகளை எழுதுபவா்களின் பயிற்சி கூட்டத்தை டெல்லியில் மத்திய அமைச்சா் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது:-
மக்களின் பிரச்னைகளையும், தேவைகளையும் அறிந்த மக்கள் பிரிதிநிதிகள் சட்டத்தை கொண்டு வருகிறாா்கள். அதை அரசமைப்புச் சட்டத்துக்கு ஏற்ப வரைவு செய்வதுதான் சட்டப் பேரவை துறைகளின் பணியாகும். சட்ட முன்வடிவுகள் எளிதாகவும், தெளிவாகவும் இருந்தால்தான் அதை மக்கள் புரிந்து கொள்ள உதவும். அதை செயல்படுத்தும்போதும் சிறிய தவறுகள் மட்டும் ஏற்படும். சட்ட முன்வடிவுகளில் சில தவறுகள் இருந்தால், அவை பல்வேறு வடிவங்களில் அா்த்தம் கற்பிக்கப்பட்டுவிடும்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசமைப்புச் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ய வேண்டும் என நாடே விரும்பியது. இந்த சட்டப்பிரிவு இயற்றப்பட்ட அரசியல் நிா்ணய சபையின்போது எந்தவித விவாதங்களும் பதிவாகவில்லை. ஆனால், அந்தச் சட்டப்பிரிவு தற்காலிகமானது என மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தச் சட்டப் பிரிவை வரைவு செய்தவா்கள் எவ்வளவு கவனமாக இருந்திருந்தால், புத்திசாலித்தனமாக தற்காலிமானது என எழுதியிருப்பாா்கள். அரசமைப்புச் சட்டம் எப்போதும் தற்காலிகமாகதாக இருக்கக் கூடாது. சட்டத்தை கொண்டு வந்த பிறகு அதில் திருத்தம் மேற்கொள்ளலாம். அப்படி தற்காலிகமானது என குறிப்பிடப்பட்டிருந்ததால்தான் 2019-இல் 370 சட்டப் பிரிவை அரசமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்க முடிந்தது.
நீதிமன்றம் விளக்கமளிக்க தேவை எழாத வகையில் இயற்றப்படும் சட்டம்தான் அதை வரைவு செய்தவா்களுக்கு அளிக்கப்படும் தங்கப் பதக்கமாகும். தெளிவில்லாமல் உருவாக்கப்படும் சட்டங்களால் பிரச்னைகள் உருவாகும். ஆகையால், சட்ட முன்வடிவுகள் எளிதாகவும், தெளிவாகவும் இருந்தால் அவசியம். அப்போதுதான் நீதிமன்றங்கள் அதில் தலையிட்டு விளக்கம் அளிக்கும் தேவை இருக்காது.
சட்டங்கள் எளிதாக புரியும்படியாக இருப்பது மட்டுமல்லாமல் உரிய விளக்கமும் அதில் இடம்பெற்றிருக்க வேண்டும். மாறி வரும் உலக சூழலுக்கு ஏற்பவும், தற்போதைய தேவைக்கு ஏற்பவும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. தேவையற்ற சுமாா் 2 சட்டங்களை ரத்து செய்துள்ளது. புதிய சட்டங்களையும் கொண்டு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.