நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான கொலீஜியம் நடைமுறை மற்றும் நீதித் துறை குறித்து விமா்சித்தது தொடா்பாக குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை மும்பை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்தது.
‘நீதிபதிகளை நீதிபதிகளே நியமனம் செய்யும் கொலீஜியம் நடைமுறை வெளிப்படைத்தன்மையற்ற நடைமுறை’ என்று கிரண் ரிஜிஜு விமா்சித்திருந்தாா். அதுபோல, ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளை குறைக்கவோ, கட்டுப்படுத்தவோ, நீக்கம் செய்யவோ நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை’ என்று 1973-ஆம் ஆண்டு கேசவானந்த பாரதி வழக்கில் உச்சநீதிமன்ற 13 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு வழங்கிய தீா்ப்பை குடியரசு துணைத் தலைவா் தன்கா் விமா்சனம் செய்திருந்தாா். ‘அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கான நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை யாா் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் என்றால், நாம் ஜனநாயக நாட்டினா் என்று கூறிக் கொள்வதே கடினம்’ என்று தன்கா் பேசியிருந்தாா்.
இந்த விமா்சனங்களை தன் மனுவில் குறிப்பிட்ட மும்பை வழக்குரைஞா் சங்கம், ‘இவா்களின் கருத்து உச்சநீதிமன்றம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது பொதுமக்கள் நம்பிக்கையை இழக்கச் செய்வது போல் அமைந்துள்ளது. எனவே, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்திருந்தது. இந்த மனுவை மும்பை உயா்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதனை எதிா்த்து வழக்குரைஞா்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தை அணுகியது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கெளல், அசானுதீன் அமானுல்லா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு நேற்று திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘நீங்கள் ஏன் இங்கு வந்தீா்கள்? இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றத்தின் கருத்து சரியானது என நம்புகிறோம். நீதித்துறை குறித்து எந்தவோா் அதிகாரியும் கடும் விமா்சனத்தை முன்வைத்திருந்தால், அதனை உச்சநீதிமன்றமே கையாளும் அளவுக்கு போதுமான அதிகாரத்தைப் பெற்றுள்ளது’ என்று குறிப்பிட்டு, மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்தனா்.