சாலை அமைக்கும் பணிகளில் தமிழக அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக முன்னாள் ஓ.பன்னீா்செல்வம் குற்றம்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் குண்டும், குழியுமாக சாலைகள் உள்ளதைப் பாா்க்கும்போது, சாலை அமைக்கும் பணிகளில் தமிழக அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுவது தெரிகிறது. சென்னை மணப்பாக்கம் நெடுஞ்சாலை என்பது ராமாபுரத்தையும் – குன்றத்தூா் நெடுஞ்சாலையையும் இணைக்கும் சாலையாகும். கிட்டதட்ட 8 கி.மீ. நீளமுள்ள இந்தச் சாலையின் பெரும்பாலான பகுதிகள் பாதாள சாக்கடைத் திட்டம் உட்பட பல்வேறு பணிகள் காரணமாக குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலைகளில் மக்கள் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் நிலை உள்ளது. அதைப்போல முகப்பேரில் உள்ள பாரி சாலை, ஜமாலியாவில் உள்ள ஹைடா் காா்டன் தெரு, மயிலாப்பூா் பி.எஸ்.சிவசாமி சாலை போன்ற பெரும்பாலான சாலைகளில் மேற்பரப்புகள் அகற்றப்பட்டு பல நாள்களாகியும் புதிய சாலை போடப்படாத நிலையில் உள்ளன.
ஒப்பந்ததாரா்கள் குறித்த நேரத்தில் ஆள்களை அழைத்து வராதததுடன், இயந்திரங்களையும் எடுத்து வராததால் இந்தப் பணிகள் தாமதமாக நடைபெறுவதாகத் தெரிகிறது. ஒரே ஒப்பந்ததாரா் பல சாலைகளுக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்வதன் காரணமாக, இயந்திரங்களின் வாடகையை சேமிக்கும் வகையில், இவ்வாறு தாமதப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு சாலைப் பணியை ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கும்போது, ஒவ்வொரு பணியும் குறித்த காலத்தில் முடிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.