ஈழத்தில் தமிழர் தாயக நிலப்பரப்பில் 14-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று உணர்வு எழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டன.
2009-ம் ஆண்டு மே மாதம் இந்த நாளில்.. 30 ஆண்டுகால தமிழீழ தாயக விடுதலைக்கான ஆயுத வழிப் போராட்டம் மவுனிக்கப்பட்டது. உலகின் ஆகப் பெரும் வல்லரசுகள் ஒன்று கூடி நடத்திய தமிழீழத் தமிழர் மீதான இன அழிப்பு யுத்தம் முடிவுக்கு வந்த நாள் இன்று.. முள்ளிவாய்க்கால், நந்திக் கடலில் கடைசி நாட்களில் லட்சக்கணக்கான தமிழ்ச் சொந்தங்கள் நாசகார நச்சு குண்டுகளால், கொத்து குண்டுகளால் சரமாரியாக வீசப்பட்ட எறிகணைகளால் மண்ணோடு மண்ணாக மாண்டு போயினர்.. வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைய சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள் பச்சைப் படுகொலை செய்யப்பட்டனர். இப்பெருந்துயரின் இந்த படுகொலையின் 14-ம் ஆண்டு நினைவு நாள் இன்று தமிழீழத் தாயக நிலம் எங்கும் உணர்வு எழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டது.
மட்டக்களப்பில் கிரான் பிள்ளையார் கோவில் வளாகம், யாழ்ப்பாணத்தின் இந்து கல்லூரி உள்ளிட்ட பல பகுதிகள், மன்னார் பஜார் பகுதி, நந்திக் கடல் உள்ளிட்ட பல இடங்களில் ஈகைச் சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி கஞ்சி பரிமாறி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. கொழும்பிலும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் பணி கடும் ராணுவ கெடுபிடிகளுக்கு இடையே நடந்தது. இதேபோல உலகத் தமிழர்கள் வாழும் நாடுகள் அனைத்திலும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.