மரக்காணம் விஷ சாராய சாவுக்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாராயணசாமி கூறினார்.
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறிய தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். அந்த தீர்ப்பை முதல்-அமைச்சர் ரங்கசாமி வரவேற்று உள்ளார். கவர்னர் அதிகார வெறி கொண்டு தீர்ப்பு பொருந்தாது என்கிறார். புதுவை நிர்வாகத்தை நான் சீரழித்துவிட்டதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி என்னை சாடியுள்ளார். அவரது ஞானத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மரக்காணம் பகுதியில் உள்ள எக்கியார்குப்பத்தில் விஷசாராயத்துக்கு பலர் பலியாகி உள்ளனர். புதுவையில் கள்ளச்சாராயம் இல்லை என்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார். அந்த சாராயம் புதுவையில் இருந்துதான் சென்றுள்ளது என்று போலீசில் பிடிபட்டவர்கள் கூறியுள்ளனர். இதற்கு முழு பொறுப்பையும் புதுவை அரசு ஏற்கவேண்டும். தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுவையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கலால்துறையில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கலால்துறை அதிகாரிகள் லஞ்சத்தை வசூலித்து முதல்-அமைச்சருக்கு பங்கு கொடுக்கின்றனர். இதை நான் பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறேன். தமிழகத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விஷசாராய சாவுக்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் ராஜினாமா செய்யவேண்டும் என்கிறார். இந்த விஷசாராயம் புதுவையில் இருந்து கடத்திச் செல்லப்பட்டுள்ளதால், அதற்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் ராஜினாமா செய்வார்களா? இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட தயாரா? இந்த உயிரிழப்புகள் மூலம் புதுவை மக்கள் வெட்கி தலைகுனியும் நிலையை உருவாக்கிவிட்டார்கள். ஆட்சியாளர்களால் மக்களுக்கு இந்த அவமானம் ஏற்பட்டுள்ளது. சாராய கடத்தல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தமிழக தலைமை செயலாளர் புதுவை தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியிருப்பதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. கலால்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க புதுவை தலைமை செயலாளர் அனுப்பிய கோப்பு முதல்-அமைச்சர் ரங்கசாமியின் அலுவலகத்தில் தூங்குகிறது. எக்கியார்குப்பம் மக்கள் சாவுக்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.