டிகே சிவகுமாருக்கு எதிரான சிபிஐ மனு மீதான விசாரணை ஜூலை 14-க்கு ஒத்திவைப்பு!

கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டிகே சிவகுமார் மீதான வருமானத்துக்கு அதிகமாக ரூ74 கோடி சொத்து குவித்த வழக்கு விசாரணைக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிரான சிபிஐ மனு மீது ஜூலை 14-ந் தேதி விசாரணை நடைபெறும் என ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு, அன்னிய செலாவணி மோசடி உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் 2017-ம் ஆண்டு டிகே சிவகுமாருக்கு சொந்தமான வீடு, நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவ்வழக்கில் அமலாக்கத்துறை உள்ளிட்டவை விசாரணை நடத்திய பிறகு 2019-ல் டிகே சிவகுமார் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு அனுமதி வழங்கப்பட்டது. இவ்வழக்கில் தம் மீதான விசாரணைக்கு தடை கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சிவகுமார் மனுத் தாக்கல் செய்தார். இதனை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 10-ந் தேதி சிவகுமார் மீதான விசாரணைக்கு தடை விதித்தது கர்நாடகா உயர்நீதிமன்றம். இந்த தடை உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் இத்தடை உத்தரவுக்கு எதிராக சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிஆர் கவாய், சுரேஷ் கரோல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்தனர். மேலும் இவ்வழக்கு விசாரணையை ஜூலை 14-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.

கர்நாடகா முதல்வர் பதவி யாருக்கு என்பதில் சித்தராமையா, டிகே சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் டிகே சிவகுமார் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை முதல்வராக்க காங்கிரஸ் மேலிடம் தயங்கியது. இதனால் அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க முன்வந்தது காங்கிரஸ் மேலிடம்.