ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்திய நிலையில், தமிழ்நாடு அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்தது. இதன் காரணமாக தற்போது தமிழர் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதேசமயம், ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த மனுக்களை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் 23-ந் தேதி விசாரிக்க தொடங்கியது. விலங்குகளுக்கு அடிப்படை உரிமை என்ற தீர்ப்பு தவறானது என்றும், ஜல்லிக்கட்டை தடை செய்யக்கோரும் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடாது என்பதே விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் நோக்கம் என பீட்டா தரப்பு வாதிட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட அரசியல் சாசன அமர்வு, மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி ஒத்தி வைத்தது. இந்த நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் சட்டத்தை இயற்றுவதற்கு தமிழ்நாடு அரசுக்கு உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மனிதர்களுக்கு சமமான உரிமைகள் விலங்குகளுக்கு இல்லை என நீதிபதி ஜோசப் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். ஜல்லிக்கட்டு போட்டிகளை பண்பாட்டின் ஒரு பகுதியாக அறிவித்தபிறகு அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
ஜல்லிக்கட்டு சட்ட திருத்தம் எந்த விதிமுறைகளையும் மீறும் வகையில் இல்லை என்றும் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் அரசியல் சாசன பிரிவு 14 மற்றும் 21 ஆகிய அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வகையில் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. அதேபோல் உலக வரலாற்றில் நடந்த மிகச்சிறந்த போராட்டங்களில் ஒன்றான மெரினா புரட்சியில் ஜல்லிகட்டை அனுமதிக்கும் தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று குறிப்பிட்டுள்ளது. தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறுகையில், “கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது குறித்து நாங்கள் திருப்தி அடைகிறோம். ஜல்லிக்கட்டு தமிழக அரசின் கலாசார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும் என்று சட்டப் பேரவை அறிவித்துள்ள நிலையில், நீதித்துறையால் வேறு எந்தக் கருத்தையும் எடுக்க முடியாது. அதை முடிவு செய்ய சட்டமன்றமே மிகவும் பொருத்தமானது” என்று கூறியது.
இதனிடையே வழக்கின் போது விலங்குகள் கேளிக்கை பொருள் அல்ல. அவற்றை வைத்து காட்சிப்படுத்தி துன்புறுத்த கூடாது: பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் வைத்த வாதம் வைத்தது. அதற்கு நீதிபதிகள். குதிரை பந்தையம் நடக்கிறது, நாய்களுக்கான பேசன் ஷோ நடக்கிறது. அது எல்லாம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்கள். மேலும் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தை அங்கீகரித்த உச்ச நீதிமன்றம் பிற மாநிலங்களும் தங்களது கலாச்சாரத்தை காக்க இத்தகைய வழிமுறைகளை மேற்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.
இந்த தீர்ப்பையடுத்து தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு அரசு சிறந்த வழக்கறிஞர்களை வைத்து சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுள்ளதாகவும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். ஜல்லிக்கட்டுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. தமிழர்களின் பண்பாட்டில் இருந்து ஜல்லிக்கட்டை பிரிக்க முடியாது என்ற தமிழ்நாடு அரசின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் அமைச்சர் ரகுபதி கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழர் தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது. தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை நாம் கட்டி வருகிறோம். வரும் ஜனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளதாவது:-
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள சட்டத்திற்கு எதிராக, விலங்குகள் நல அமைப்புகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில், நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சி.டி. ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து வந்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது, “ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் துன்புறுத்தப்படுகிறது என்றும், காளைகளை வற்புறுத்தி போட்டிகளில் பங்கேற்க வைக்கின்றனர்” என்றும் விலங்குகள் நல அமைப்புகளால் வாதிடப்பட்டது. இதையடுத்து, “ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வு. பாரம்பரியம், இறை வழிபாடு அம்சங்களுடன் தொடர்புடையது. இது தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்ததால், விலங்குகள் நல அமைப்புகளின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று தமிழக அரசு வாதிட்டது.
அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி கே.என்.ஜோசப் தலைமையிலான அமர்வு வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது. அதன்படி ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க மறுத்துள்ள உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டு தொடர்பாக, ‘தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த ஆவணங்கள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என்பதை ஏற்றுக்கொள்கிறோம்’ என்று கூறி உள்ளது. ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய ஒருமித்த தீர்ப்பில், “ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க வரவேற்கத்தக்க தீர்ப்பு ஆகும். இதன் மூலம் தமிழ்நாட்டின் பண்பாட்டு மரபு நிலைநாட்டப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குறியுள்ளதாவது:-
ஜல்லிக்கட்டு நடத்தத் தடையில்லை என்று மாண்பமை உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசமைப்புச் சட்ட அமர்வு இன்று (18.5.2023) வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கதும் வரலாற்றுச் சிறப்புமிக்கதும் ஆகும். இது, சிந்துவெளி நாகரிகம் முதல் இன்று வரை தொடரும் திராவிடர் வரலாற்றுத் தொடர்ச்சியின் அடையாளத்திற்குக் கிடைத்த பெரு வெற்றியாகும். தமிழ்நாடு அரசின் வாதங்களை ஏற்றுக் கொண்டு, ஜல்லிக்கட்டைத் தடை செய்ய முயன்ற ஆரிய சூழ்ச்சிகளுக்கு சம்மட்டி அடி வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். சட்டரீதியாக சரியாக எதிர்கொண்ட தமிழ்நாடு அரசுக்கு நமது பாராட்டுகள்! பண்பாட்டுப் படையெடுப்புகளுக்கு எதிரான திராவிடர் வரலாற்று, பண்பாட்டு அடையாள மீட்புப் போரில் இது ஒரு முக்கிய மைல் கல்லாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.