திருமாவுக்கு திமுக கூட்டணியில் இருக்க விருப்பம் இல்லை: ஜெயக்குமார்!

அதிமுக, பாஜக உடனான கூட்டணியை பரிசீலனை செய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருந்த நிலையில், திருமாவளவனுக்கு திமுக கூட்டணியில் இருக்க விருப்பம் இல்லை எனத் தெரிவித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னையில் அண்ணா தொழிற்சங்க ரேவை சார்பில் 310 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

திமுகவுக்கு விலைபோய் விட்ட வைத்திலிங்கம் அதிமுகவை விமர்சிப்பதை ஏற்க முடியாது. வைத்திலிங்கம் ஊழலில் சிக்கியிருப்பதால் அதிலிருந்து தப்பிக்க திமுகவின் பி டீமாக மாறியுள்ளார். விளையாட்டுப் பிள்ளையாக இருக்கலாம். வைத்திலிங்கம் போன்று விளங்காத பிள்ளையாக இருக்கக்கூடாது. ஓபிஎஸ், வைத்தியலிங்கம் இருந்ததால் தான் அதிமுக கடந்தகால தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளது. கட்சியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட டிடிவி தினகரனுக்கு அதிமுகவை விமர்சிக்க தகுதியோ, அருகதையோ இல்லை. ஓபிஎஸ், டிடிவி தினகரன், வைத்திலிங்கம் ஆகியோரை பொம்மைகள் போன்று பயன்படுத்தி திமுக பொம்மலாட்டம் நடத்துகிறது. ஏற்கனவே தந்தை மகன் ஆகிய இருவரையும் மாற்றுத்திறனாளி ஒருவர் உலக கோப்பையை வென்றதாக ஒரு டூப்ளிகேட் கோப்பையை காண்பித்து ஏமாற்றியுள்ளார்.

உலகத்தில் எங்கேயாவது கள்ளச்சார வியாபாரிக்கு ஐம்பதாயிரம் கொடுத்திருப்பார்களா? கள்ளச்சாராய வியாபாரிக்கு ஐம்பதாயிரம் நிவாரணம் அளிக்கப்படுகிறது என்றால் இது எந்த அளவுக்கு முட்டாள்தனம் வாய்ந்த ஆட்சியாக உள்ளது. அறிவில்லாத திமுக அரசு தான் இன்று தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. பல் பிடுங்கி பல்வீர் சிங் விவகாரத்தில் சிறப்பு அதிகாரியான அமுதா ஐஏஎஸ்ஸை உள்துறை செயலாளராக நியமித்தால் அறிக்கை எவ்வாறு இருக்கும்? மக்களுடைய வரிப்பணத்தில் அவர்களுக்கு ரோடு போட்டு தரவும் விளக்கு வசதி ஏற்படுத்தி தரவும் முடியாமல் கடலில் பேனா வைப்பதற்கு என்ன அவசியம்? மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் கடலில் பேனா வைப்பதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். நிச்சயமாக இதில் நீதியை வெல்லுவோம்” எனத் தெரிவித்தார்.

கர்நாடகாவில் பாஜக தோல்வியால் அதன் கூட்டணியில் உள்ள அதிமுக, கூட்டணியில் தொடர்வது பற்றி மறு பரிசீலனை செய்ய வேண்டும் என திருமாவளவன் கூறியது பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், “திருமாவளவன் பேசியது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு எடுப்பார். அதே சமயம் திருமாவளவனுக்கு திமுக கூட்டணியில் இருக்க விருப்பம் இல்லை” எனத் தெரிவித்தார்.