எங்களுக்கு இலக்கு ஒன்றுதான். அதுவே இனத்தின் விடுதலை: சீமான்

லோக்சபா தேர்தலுக்காக ஜூன் 13-ந் தேதி முதல் தமிழ்நாடு தழுவிய சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் டிசம்பரில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டப்பட்டு கட்சி விதிகள் வெளியிடப்படும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென அறிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் நேற்று இரவு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் களம் வருகிறது.. நாம் தனித்துதான் போட்டியிடுகிறோம். எத்தனை தேர்தல் வந்தாலும், எப்போது வந்தாலும் கவலைப்பட வேண்டாம். நாம் தனித்துதான் போட்டியிடுவோம். ஜூன் 13-ந் தேதி முதல் சுற்றுப்பயணம் வருகிறேன். கன்னியாகுமரியில் இருந்து இந்த பயணம் தொடங்குகிறது. இது தொடர்பாக முழுமையாக அறிவிக்கப்படும். அதுக்குள்ள உங்க பஞ்சாயத்துகளை பேசி தீர்த்து கொள்ளுங்க.. நாட்டுக்கு தலைவராகனும் நான்.. நாட்டாமையாகவே காலத்தை ஓட்ட வெச்சிடாதீங்க.. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் 3 மாதம் இந்த பயணம்.. கலந்து பேசி வேட்பாளர்களை தேர்வு செய்வோம். டிசம்பரில் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டு கட்சி விதிகள் வெளியிடப்படும். அதன்படிதான் அனைவரும் செயல்பட வேண்டும். ஜனவரி முதல் தேர்தல் பிரசாரம் தொடங்கிவிடும். அதற்கு முன்னரே தேர்தல் வரும் எனவும் சொல்கிறார்கள்.

அதிமுக, திமுக என்கிற இரு மலைகளை வெல்ல முடியுமா? இந்த மலைகள் இனி வளராது. தமிழ் இன பரம்பரை வளர்ந்து கொண்டேதான் இருக்கும். இந்த மலைகளை உடைப்போம். தமிழ் மக்கள் என்ற கடவுளின் இதயத்தை நாம் தொடுவோம். இந்தியா மட்டும் இலங்கை பிரச்னையில் தலையிடாமல் இருந்திருந்தால் 25 ஆண்டுகளுக்கு முன்பே தனித்தமிழ் ஈழம் எனும் நாடு உருவாகி இருக்கும். எங்களுக்கு இலக்கு ஒன்றுதான். அதுவே இனத்தின் விடுதலை. நாம் தமிழர் கட்சியினர் ஜாதி பார்த்து பழக மாட்டோம். ஜாதி பார்ப்பவர்களுடன் பழகவே மாட்டோம். நம்முடைய புரட்சி சாத்தியமா என நினைக்கலாம். தமிழினத்துக்காக போராடுவதற்கு நாம் தமிழர் கட்சி அவசியம் இருக்கத்தான் வேண்டும். இவ்வாறு சீமான் பேசினார்.