சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நான்கு கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கடந்த மார்ச் மாதம் கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. அந்தப் பரிந்துரையை பரிசீலித்த குடியரசுத் தலைவர் அதனை ஏற்கும் விதமாக நான்கு பேரையும் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஆணை பிறப்பித்தார். இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றங்களில் நாளுக்கு நாள் வழக்குகள் அதிகமாகிக் கொண்டே செல்வதால் வழக்கு விசாரணைக்கும், தீர்ப்பு கிடைப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்கள் வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இதனால் தான் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை கொலிஜியம் முன்னெடுத்துள்ளதாக தெரிகிறது. உயர்நீதிமன்றத்தை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மாவட்ட மற்றும் சப் கோர்ட்களிலும் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் கூடுதல் நீதிமன்ற கட்டிடங்களும் பல இடங்களில் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.