பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் தோல்வியடைந்த மாணவர்களுக்கும் பெற்றோர்கள் அழுத்தம் தர வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஏப்ரல் 6ம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடந்தது. பத்தாம் வகுப்பு தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்களும், 11ம் வகுப்பு தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்களும் எழுதினர். இதையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கி மே 4ம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக மாணவர்கள் தெரிந்து கொண்டனர். பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 91.39% பேர் தேர்ச்சி அடைந்துள்ள நிலையில் மாணவர்களை விட மாணவியர் 6.50 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16% ஆகவும் பதிவாகியுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,35,614 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில் 4,04,904 பேர் மாணவர்கள், 4,30,710 பேர் மாணவிகள் ஆவர். வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்திலும் ராணிப்பேட்டை மாவட்ட மாணவர்கள் கடைசி இடத்தையும் பிடித்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 9 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு அச்சம் காரணமாக ஆப்செண்ட் ஆகினர். 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன் மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்புக்கு துணைத்தேர்வுக்கு மே 23 முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தோல்வியடைந்த மாணவர்கள் கவலைப்பட வேண்டாம் என்று கூறினார். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கும் பெற்றோர்கள் அழுத்தம் தர வேண்டாம் என்று கூறினார். தோல்வியடைந்தவர்கள் விரைவில் துணை தேர்வுகளை எழுதி நடப்பாண்டே உயர்கல்விக்கு செல்ல முடியும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். எல்லா பிள்ளைகளும் நமது பிள்ளைகள்தான். எனவே பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.