டாஸ்மாக் மூலம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திமுகவினர் மாற்ற இருப்பதாக கூறி ஒன்றிய நிதி அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் இந்தியாவில் ஊழல் அதிகரித்துள்ளதாக கூறி கடந்த 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது பாஜக அரசு. அதைத் தொடர்ந்து கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டது பாஜக அரசு. அதன்படி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என ஒரே இரவில் அறிவித்தார் பிரதமர் மோடி. இந்த திடீர் அறிவிப்பின் மூலம் கருப்பு பணம் ஒழியாவிட்டால் என்னை தீயிட்டு கொழுத்துங்கள் என மக்களிடம் கூறினார் பிரதமர் நரேந்திர மோடி.
ஒரே நாளில் பழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது எனக் கூறியதால் பொதுமக்கள் ரூபாய் நோட்டுக்களை மற்ற வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் அலைமோதினர். கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவங்களும் நடந்தது. அதைத் தொடர்ந்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்தநிலையில் அந்த புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் படி, மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை செப்டம்பர் 30ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பாஜக அரசின் இந்த திடீர் அறிவிப்பை பல்வேறு அரசியல் கட்சிகளும் விமர்சித்து வருகின்றனர். பாஜகவின் தோல்விகளை மறைக்கவே இந்த திடீர் அறிவிப்பு என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சீறினார். ஆனால் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவோ மிகக் கடுமையாக சாடினார். பாஜகவின் கோமாளித்தனம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பொளந்தார். நெட்டிசன்களும் சமூகவலைதளங்களில் சமர் செய்து வருகின்றனர். ஆனால் வழக்கம் போலவே பாஜகவைச் சேர்ந்தவர்கள் சூப்பர் முடிவு என பாராட்டி வருகின்றனர்.
இந்தநிலையில் திமுகவை சாடியும், 2000 ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறுவதை பாராட்டியும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
நிலையான பொருளாதார வளர்ச்சிக்காக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பை தமிழக மக்கள் சார்பாக மனப்பூர்வமாக வரவேற்கிறோம். பிரதமரின் சரியான திட்டமிடுதலும், எடுக்கும் முடிவுகளும் எப்போது சாதாரண மக்களின் நலன் சார்ந்ததாகவே இருக்கும் என்பதை இந்த அறிவிப்பு மீண்டும் நிரூபணமாக்கியுள்ளது.
ஆனால் திமுகவைப் பற்றி உங்களுக்கே தெரியும். நவீனமாக ஊழல் செய்வதில் வல்லவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் மகனும், மருமகனும் 30 ஆயிரம் கோடி முறைகேடாக வருமானம் ஈட்டியுள்ளதாக தமிழகத்தின் மூத்த அமைச்சர் ஒருவரே தெரிவித்துள்ளார். எனவே திமுகவைச் சேர்ந்தவர்கள் முறைகேடாக ஈட்டிய 2000 ரூபாய் நோட்டுக்களை, கூட்டுறவு சங்கங்கள் மற்றும் டாஸ்மாக் மூலம் மாற்ற இருப்பதாக தெரிய வருகிறது. எனவே எந்தெந்த வழிகளில் ரூபாய் நோட்டுக்கள் மாற்றப்படுகிறது என்பதை கண்காணிக்க செய்ய வங்கிகளுக்கு நிதி அமைச்சகம் உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.