ஜூன் 15ஆம் தேதிக்குள் டாஸ்மாக் கடைகளை அரசு மூடாவிட்டால் தாங்களே மூடுவோம் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி இதனைக் கூறியிருக்கிறார். கள்ளச்சாராயம் மரணங்கள் தொடர்பாக தமிழக அரசு மீது கடுமையாக குற்றஞ்சாட்டிய கிருஷ்ணசாமி, ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள மது உற்பத்தி ஆலைகளை மூட வேண்டும் என குரல் கொடுத்துள்ளார். தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரும் கோரிக்கைகள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில், கிருஷ்ணசாமியும் மதுவிலக்கை வலியுறுத்தும் விதமாக இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
மதுவால் கிடைக்கும் வருமானம் தமிழ்நாட்டிற்கு அவமானம் என அன்புமணி ராமதாஸ் அண்மையில் தான் அமைச்சர் செந்தில்பாலாஜியை மிக கடுமையாக விமர்சித்திருந்தார். அதேபோல் மதுவில்லா தமிழகம் என்ற குறிக்கோளுக்காக பாமக, அதிமுக, உட்பட எந்த அரசியல் கட்சியுடனும் கை கோர்க்கத் தயார் என வேல்முருகன் அறிவித்துள்ளார். மொத்தத்தில் திமுக அரசுக்கு எதிராக மதுவிலக்கை மையப்படுத்தி அரசியல் கட்சிகள் ஓரணியில் திரளும் சூழலும் உருவாகியிருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.