கர்நாடக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்று நடைபெற்ற நிலையில், இதில் கலந்து கொண்ட ராகுல் காந்தி நிகழ்ச்சியில் உரையாற்றினார். கர்நாடக மக்கள் வெறுப்பைப் புறந்தள்ளி அன்புக்கு ஓட்டளித்ததாக ராகுல் தெரிவித்தார்.
கர்நாடகாவில் கடந்த வாரம் சட்டசபைத் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபையில் 113 இடங்களில் வெல்லும் கட்சிக்குத் தனிப்பெரும்பான்மை என்ற சூழல் இருந்தது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வென்றது. அடுத்து முதல்வர் யார் என்பதிலும் 4 நாட்கள் ஆலோசனைக்குப் பின்னர் தீர்வு கிடைத்தது. சித்தராமையா மற்றும் சிவக்குமார் என இரு தரப்பு ஆதரவாளர்களும் தங்கள் தலைவருக்கு முதல்வர் பதவி தர வேண்டும் என வலியுறுத்தினர். 4 நாள் ஆலோசனைக்குப் பிறகு சித்தராமையா முதல்வராக அறிவிக்கப்பட்டார். டிகே சிவக்குமார் துணை முதல்வராகவும் கர்நாடக காங்கிரஸ் தலைவராகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்றைய தினம் சித்தராமையா, டிகே சிவக்குமார் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்கும் விழா நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களும் கலந்து கொண்டனர். இதில் காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பெரும் கரகோஷத்திற்கு மத்தியில் சித்தராமையா, டிகே சிவக்குமார் பொறுப்பேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது:-
கர்நாடக அமைச்சரவை பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களுக்கும் நன்றி. கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் செயல்படும். பாஜகவின் பணம், அதிகார பலத்தை வைத்து தேர்தலில் வெற்றி பெற முயன்றனர். ஊடகங்களும் காங்கிரஸ் வெல்லாது என்றே கூறி வந்தன. காங்கிரஸ் வெல்ல வாய்ப்பே இல்லை என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், அனைத்தையும் தாண்டி காங்கிரஸ் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு ஒரே ஒரு காரணம் தான். ஏழை, எளியோர், பிற்படுத்தப்பட்டோர், தலித் மக்களின் நலனுக்காகக் காங்கிரஸ் போராடியதே வெற்றிக்குக் காரணம். எங்களிடம் உண்மையும் ஏழை மக்கள் எங்களுக்கு அளித்த ஆதரவு மட்டுமே இருந்தது. மறுபுறம், பாஜகவிடம் பணக்காரர்களும், காவல்துறையும், பணமும் இருந்தது. ஆனால் கர்நாடக மக்கள் இவை அனைத்தையும் தோற்கடித்தனர்.
கர்நாடக மக்கள் ஊழல் மற்றும் வெறுப்பைப் புறந்தள்ளி அன்புக்கு ஓட்டளித்தனர்.
ஊழலற்ற சுதந்திரமான ஆட்சியைக் காங்கிரஸ் தரப் போகிறது. கடந்த 5 ஆண்டுகளாகக் கர்நாடக மக்கள் துன்பத்தை எதிர்கொண்டு வந்தனர். இங்கே நான் பாரத் ஜோடோ யாத்திரைக்கு வந்திருந்தேன். அப்போதே கர்நாடகாவில் விரைவில் அன்பு மலரும் என்று சொல்லி இருந்தேன். அதேபோல இப்போது நடந்துள்ளது. இனிமேல் கர்நாடக மக்களுக்கு நல்ல காலம் தான்.
தேர்தல் சமயத்தல் நாங்கள் 5 முக்கிய வாக்குறுதிகளை அளித்தோம். இந்த 5 வாக்குறுதிகளும் அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு சட்டப்படி செயல்படுத்தப்படும். நாங்கள் முதல் வாக்குறுதியாக பெண்களுக்கு மாதம் ரூ.2000 வழங்குவதை அறிவித்தோம். 2வது வாக்குறுதி என்பது வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என கூறினோம். 3வது வாக்குறுதியாக அன்னபாக்யா திட்டத்தில் 10 கிலோ அரசி இலவசம் என்றோம். 4வது வாக்குறுதியாக பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் என்பதை தெரிவித்தோம். 5வது வாக்குறுதியாக டிகிரி முடித்து வேலையில்லாதவர்களுக்கு ரூ.3000, டிப்ளமோ முடித்து வேலையில்லாதவர்களுக்கு ரூ.1,500 வழங்குவதாக அறிவித்தோம். நாங்கள் பொய் வாக்குறுதிகளை கொடுப்பது இல்லை. கொடுத்த வாக்குறுதிப்படி நடப்போம். சில மணிநேரங்களில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கி 5 வாக்குறுதிகளும் சட்டப்படி செயல்படுத்தப்படும். காங்கிரஸ் கட்சி எப்போதும் சொல்வதை தான் செய்யும். இந்த காங்கிரஸ் அரசு விவசாயிகள், வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு ஆதரவாக இருப்பதையே குறிக்கோளாக கொண்டு இருக்கும். ஊழல் இல்லாத அரசை கொடுப்போம் என உறுதியளிக்கிறோம். நீங்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளித்துள்ளனர். இதனை நாங்கள் மறக்கவே மாட்டோம். கர்நாடகா அரசு மக்களின் அரசாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.