மதுவை மொத்தமாக அழித்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்: ஜான் பாண்டியன்!

மதுவிலக்கு இருந்தாலே வன்முறைகள் நடக்காது.. இதை முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று ஜான் பாண்டியன் கூறியுள்ளார்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஏழை எளிய மக்களை கொலை செய்து கொண்டிருக்கிறது இந்த அரசு. ஒட்டுமொத்த மக்களும், மதுவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று சொன்னாலும்கூட, தமிழ்நாடு அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை என்பது வருத்தத்துக்குரியது. இனிவரும் காலத்தில் மதுவை குறைப்போம் என்று சொன்னார்கள். ஆனால், இன்றுவரை மதுஒழிப்பு இன்றுவரை நடைபெறவில்லை. அதனால், ஏற்படுகின்ற சங்கடங்கள்தான் இந்த கள்ளச்சாராய விவகாரம். இந்த கள்ளச்சாராய விவகாரத்தில் கீழ்மட்ட அதிகாரிகள் மட்டுமே சஸ்பெண்ட் ஆகியுள்ளனர்.. இதுக்கு காரணமான உயர் அதிகாரிகளையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். இதை நாங்கள் அரசிடம் கேட்டுக் கொள்கிறோம். மதுவை மொத்தமாக அழித்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்.

இதுபோலவே வேங்கைவயல் விவகாரத்தில் யார் அந்த காரியத்தை செய்தது என்பது அரசுக்கு நன்றாக தெரியும். ஆனால், அவர்களை கைது செய்வதை விட்டுவிட்டு, அந்த கிராம மக்களே அந்த காரியத்தை செய்தார்கள் என்று சொல்லி, விஷயத்தை மூடி மறைக்க பார்க்கிறார்கள். இது கண்டனத்துக்குரியது. இதுபோன்ற இழிவுகள் எல்லாம் தமிழகத்தில் நடக்க கூடாது என்றால், மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். மதுவிலக்குக்காக வீதிகளில் இறங்கி போராடக்கூடிய நிலை எப்போது ஏற்படுகிறதோ, அப்போதுதான் இதை அரசு கவனத்தில் கொள்ளும்.

இறந்துபோன குடும்பத்துக்கு 10 லட்சம் தருகிறார்கள் என்றால், இது எவ்வளவு கேவலமான நிலை? ஒரு குடிகாரனுக்கு 10 லட்சம் என்று சொன்னால், விபத்தில் இறந்தவருக்கு இந்த அரசு என்ன செய்கிறது? அரசு அதிகாரிகள், வேலையில் இருக்கும்போது இறந்துவிட்டால், அவர்களுக்கு எத்தனை லட்ச ரூபாய்கள் தருகிறார்கள் என்று எல்லாருக்குமே தெரியும். ஆனால், இப்படி குடித்து இறந்துபோனவருக்கு 10 லட்சம் என்பது கண்டனத்துக்குரியது. இதை தமிழக அரசு செய்யக்கூடாது. இது குடிகாரர்களை ஊக்குவிப்பதற்கு முன்னுதாரணமாகிவிடும்.

மதுவிலக்கு இருந்தாலே வன்முறைகள் நடக்காது.. இதை முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும்.. ஆனால், இதுக்காக பதவி விலக வேண்டும் என்று சொல்வதையெல்லாம் ஏற்க முடியாது.. இது கண்டனத்துக்குரியது.. அவ்வளவுதான்.. அதற்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகளில் இருந்து விலக சொல்வது தவறு. அப்படி பார்த்தால், இந்தியாவில் உள்ள அத்தனை அமைச்சர்களும் பதவி விலக நேரிடும்.. சாராய ஆலைகளை வைத்துக் கொண்டு, நிறைய கோடி ரூபாய் கொள்ளையடித்து சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக, மக்களை பணயம் வைக்கிறார்கள்.. சாராய ஆலைகளை நிரந்தரமாக மூடினாலே, முக்கால்வாசி பிரச்சனை இங்கே தீர்ந்துவிடும்.. இப்படித்தான், மதுவிலக்கை படிப்படியாக கொண்டு போக முடியும். அதேபோல, கள்ளச்சாராயத்தை விற்பதற்கு காரணமாக, சில அதிகாரிகளும் இருக்கிறார்கள்.. இந்த விஷயத்தை பொறுத்தவரை, சில அதிகாரிகளுக்கு கையூட்டு பணம் தந்துதான், கள்ளச்சாராயத்தை விற்றுள்ளார்கள்.. அதை அவர்களே ஒப்புதல் வாக்குமூலமாக சொல்கிறார்கள்.. அதனால்தான், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுகவுக்கு நெருக்கமானவர்களே அந்த ஆலைகளை வைத்திருக்கிறார்கள்.. எதிர்க்கட்சிகளில் எத்தனையோ பேர் சாராய ஆலைகளை வைத்திருக்கிறார்களே? அதனால், அந்த ஆலைகளின் லைசன்ஸ்களை முதல்வர் கேன்சல் செய்ய வேண்டும்.. அதேபோல, டாஸ்மாக்கை திறந்து வைப்பது அரசுதான், அரசு செய்வது தவறு என்று சொல்லி கொண்டிருப்பதைவிட, மக்களும் திருந்தணும்.. உடலுக்கு கேடு என்று தெரிந்தும், ஏழை மக்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். மதுவைவிட கஞ்சா புழக்கம்தான் அதிகமாகி உள்ளது.. கடந்த கால அரசிலும் கள்ளச்சாராயமும், கஞ்சா நடமாட்டமும் இருந்தது.. இல்லவே இல்லை என்று நாம் சொல்ல முடியாது.. ஆனால், இந்த ஆட்சியில் அதிகமான புழக்கத்தில் இவைகள் உள்ளன. வலுவான கூட்டணியில் உள்ளவர்கள், யாராவது இந்த கள்ளச்சாராயம் பற்றி பேசறாங்களா? வேங்கை வயல் விஷயத்தை பேசறாங்களா? பேட்டி மூலம் ஒருத்தரும் வாய் திறக்கறதே இல்லை.. தவறு செய்தால் கண்டிக்கணும்தானே? இதுக்கு பேர்தான் கூட்டணியா? கூட்டணி தர்மம் என்பதை நியாயத்தை சுட்டிக்காட்ட வேண்டும், தவறு செய்பவர்களை சுட்டிக்காட்ட வேண்டும்.. நான் எந்த கூட்டணியில் இருந்தாலும், தப்பு என்றால் உடனே அதை வெளிப்படையாக சொல்லிடுவேன். இப்படி யாரையாவது சொல்ல சொல்லுங்க பார்ப்போம்.. சொல்ல மாட்டாங்க.. எதிர்த்து பேசிவிட்டால் சீட் தர மாட்டாங்களே என்ற பயம்தான்.

தேர்தல் சமயத்தில் கூட்டணி பற்றி சொல்வோம்.. இப்போதே சொல்ல முடியாது.. காலச்சூழலை பொறுத்ததுன் கூட்டணியை சரியாக சொல்ல முடிடியும்.. களப்பணிகளை நடத்தி வருகிறோம்.. நவம்பர் 19ம் தேதி, சங்கரன்கோவிலில் மாநாடு நடத்தபோகிறோம்.. ஜெயலலிதா மரண விவகாரத்தை, ஆறுமுகசாமி கமிஷன் விசாரித்தார்களே.. சட்டசபையிலும் அறிக்கை தாக்கல் செய்தார்களே.. ஆனால், அதற்கு பிறகு, என்ன நடவடிக்கை எடுத்தது இந்த அரசு? அப்படின்னா அந்த கமிஷனை எதுக்கு போடறீங்க? இதுக்கு இத்தனை லட்சம் ரூபாய் சம்பளம் தந்தீங்க? சொன்னதை செய்வோம்ன்னு சொன்னீங்களே, இதுவரை யார் மீது நடவடிக்கை எடுத்தீங்க. ஆக, எந்த புகார்கள் என்றாலும், எந்த துறையாக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த அரசு தயங்குகிறது.. காரணம், நாளைக்கு அவங்க மேலேயே தவறுவந்துவிட்டால், இவங்க நடவடிக்கை எடுத்துவிடக்கூடாது என்பதற்காக, இதெல்லாம் ஒரு முன்னுதாரணமாக இருக்குமோ என்று நான் சந்தேகப்படறேன். அரசே தயங்கினால் நாம் யார்கிட்டதான் போய் புகார் தர்றது?. இவ்வாறு ஜான்பாண்டியன் கூறினார்.