பிகார் முதல்வர் நிதீஷ் குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சந்திப்பு!

பிகார் முதல்வர் நிதீஷ் குமார், தலைநகர் டெல்லியில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று சந்தித்துப் பேசினார்.

மத்தியில் பாஜக தலைமையிலான அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் பிகார் முதல்வர் நிதீஷ் குமார், தலைநகர் டெல்லியில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று சந்தித்துப் பேசினார். அப்போது டெல்லி அரசின் நிா்வாக அதிகாரங்கள் தொடா்பாக மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிராக அரவிந்த் கேரிவாலுக்கு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தனது ஆதரவினை தெரிவித்துக்கொண்டார். உடன் பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் இருந்தார்.

பின்னர் நிதீஷ் குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை எப்படி பறிக்க முடியும்? இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. நாங்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நிற்கிறோம். நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க முயற்சித்து வருகிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

டெல்லியில் ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி அரசுக்கும் மத்திய பாஜக அரசுக்கும் இடையே அதிகார மோதல் கடந்த 8 எட்டு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதற்குத் தீா்வு காண உச்ச நீதிமன்றத்தில் டெல்லி அரசு தொடுத்த வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமா்வு, நிலம், காவல், பொது உத்தரவு ஆகியவை தவிர அனைத்து விவகாரங்களிலும் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்குதான் உரிமை உள்ளது என்று தீா்ப்பளித்தது. ஆனால், டெல்லி அரசுக்கு அதிகாரிகள் நியமனத்தில் மத்திய அரசு அனுமதி அளிப்பதில்லை என்று தீா்ப்பு வெளியான மறுதினமே உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடுத்தது.

இந்நிலையில், யூனியன் பிரதேச உயரதிகாரிகளான ‘டானிக்ஸ்’ பிரிவு குரூப் ஏ அதிகாரிகளின் பணி நியமனம், பணியிட மாற்றம் செய்வதை முடிவு செய்வதற்கான தேசிய தலைநகா் சிவில் சா்வீஸ் ஆணையம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதில், டெல்லி முதல்வா், தலைமைச் செயலா், முதன்மை உள்துறை அமைச்சா் ஆகியோா் இடம்பெறுவாா்கள். பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி அரசின் பணி நியமன அதிகாரத்தை குறைக்கும் வகையில் இந்த அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாகவும் இது உச்ச நீதிமன்ற அவமதிப்பு என்றும் ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.