ராணுவ வீரர்களின் உடல்களை முன்வைத்து 2019 தேர்தலை சந்தித்த பாஜக: சத்யபால் மாலிக்!

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் உடல்களைக் காட்டி 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை பாஜக எதிர்கொண்டதாக முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் மீண்டும் குற்றம்சாட்டி உள்ளார்.

2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். அதாவாது 300 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துடன் டிரக் ஒன்று ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது மோதி வெடித்தது. இத்தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். புல்வாமா தாக்குதல் சம்பவம் அப்போது பெரும் புயலை கிளப்பியது. ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. இதன்பின்னர் புல்வாமா தாக்குதல் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், புல்வாமா தாக்குதல் தொடர்பாக மத்திய பாஜக அரசு மீது குற்றம்சாட்டி பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வந்தார். இது மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை மத்திய அரசும் பாஜக மூத்த தலைவர்களும் மறுத்தனர். தற்போது சத்யபால் மாலிக் விசாரணை ஏஜென்சிகளின் விசாரணைகளை எதிர்கொண்டும் இருக்கிறார்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மிரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சத்யபால் மாலிக் மீண்டும் புல்வாமா தாக்குதல் தொடர்பாக கூறியதாவது: –

புல்வாமா தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது பாதுகாப்பு அமைச்சகத்தின் அலட்சியம் குறித்தும் பிரதமர் மோடியிடம் கூறினேன். ஆனால் இதை பற்றி வெளியில் பேசாமல் அமைதியாக இருக்கும்படி பிரதமர் மோடி என்னை அச்சுறுத்தினார். 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை நமது ராணுவ வீரர்களின் உடல்களை முன்வைத்தே பாஜக எதிர்கொண்டது. புல்வாமா தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி இருந்தால் பல ராணுவ அதிகாரிகள் சிறைக்குதான் போயிருக்க வேண்டும். என் மீதான வழக்கு விசாரணைகளை கண்டு எல்லாம் நான் அஞ்சப் போவது இல்லை. உண்மையைத்தான் பேசுவேன். இவ்வாறு சத்யபால் மாலிக் கூறினார்.