வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கேபி அன்பழகன் மற்றும் சி விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கேபி அன்பழகன் மீது 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் 2013-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். தற்போது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்எல்ஏவாக உள்ளார் விஜயபாஸ்கர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் கடந்த 2021 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகம், அவரது உறவினர்களின் வீடுகள் என பல இடங்களில் சோதனை லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.
இதில் விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது 35.79 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. விஜயபாஸ்கர் தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் 210 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் அப்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இதில் கேபி அன்பழகன் அமைச்சராக இருந்தபோது 45.20 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் ரெய்டுகளின் அடிப்படையில் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன் சசிமோகன், சந்திரமோகன் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கே.பி.அன்பழகன் மீதான வழக்கில் 10,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் இருவர் மீதும் தருமபுரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள குற்றவியல் நீதிமன்றங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.