அரசு அனுமதி பெற்ற பாரில் சட்டவிரோத மதுபானம் விற்கப்பட்டது எப்படி?: எடப்பாடி பழனிசாமி

தஞ்சாவூரில் பாரில் மது வாங்கி குடித்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரசு அனுமதி பெற்ற பாரில் சட்டவிரோத மதுபானம் விற்கப்பட்டது எப்படி என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தஞ்சாவூர் கீழஅலங்கம் பகுதியில் இயங்கி வரும் தற்காலிக மீன் மார்க்கெட் அருகே டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு எதிராக அனுமதி பெற்ற டாஸ்மாக் பார் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த பாருக்கு நேற்று காலை 11 மணி அளவில் தஞ்சாவூர், கீழவாசல் பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரியான குப்புசாமி (68), விவேக் (36) ஆகியோர் மது குடிக்கச் சென்றனர். டாஸ்மாக் கடை 12 மணிக்கு தான் திறக்கப்படும் என்பதால், அருகில் இருந்த பாரில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுவை வாங்கி குடித்துள்ளனர். மது அருந்தி விட்டு வந்த குப்புசாமி வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கி அந்த இடத்திலேயே விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை ஆட்டோவில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். குப்புசாமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, விவேக்கும் மயங்கி விழுந்தார். இதனையறிந்த அருகிலிருந்தவர்கள், அவரை மீட்டு ஆட்டோவில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் விவேக்.

இந்த தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கலால் அதிகாரி பழனிவேல், வட்டாட்சியர் சக்திவேல், டாஸ்மாக் வட்டாட்சியர் தங்கபிரபாகரன் ஆகியோர் டாஸ்மாக் பார் இருக்கும் இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அனுமதி பெற்று இயங்கி வந்த பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பாருக்கு சீல் வைத்த நிலையில் அதற்கு எதிரே உள்ள டாஸ்மாக் கடைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. தஞ்சை பொறுப்பு கோட்டாட்சியர் பழனிவேல் தலைமையில் டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
கூறியுள்ளதாவது:-

தஞ்சாவூர், கீழவாசல் பகுதியில் உள்ள அரசு அனுமதிக்கப்பட்ட பாரில், உரிய நேரத்திற்கு முன்பாக சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுபானம் அருந்திய குப்புசாமி, விவேக் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

அரசு அனுமதிக்கப்பட்ட பாரில் சட்டவிரோத மதுபானம் விற்கப்பட்டது எப்படி? என்பதனை இந்த அரசு தெளிவுபடுத்த வேண்டும். முறையற்ற மது விற்பனையால் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் நேர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே அரசே ஏற்று மது விற்பனையை நடத்தி வருகிறது‌. அப்படி இருக்கையில் சமீபகாலமாக அரசு மதுபான விற்பனையில் பல்வேறு திட்டமிட்ட முறைகேடுகள் தமிழ்நாடு முழுவதும் நடந்து வருவதையும் அதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுவதையும் நாம் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

நான் பலமுறை இத்துறையில் நடந்துவரும் முறைகேடுகளை எடுத்துரைத்தும் வழக்கம்போல் இந்த அரசு மக்களின் உயிர் காக்க அக்கறையின்றி மெத்தனம் காட்டி வருகிறது. ஆகவே தஞ்சாவூர், செங்கல்ப்பட்டு மற்றும் விழுப்புரத்தில் நடைபெற்ற போலி மதுபான-கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கும் உரிய நீதி வேண்டியும், இதனை உரிய விசாரணைக்கு உடனே உட்படுத்த வேண்டியும் மாண்புமிகு ஆளுநரிடம் நாளை(இன்று) மனு அளிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.