முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14-ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பெசன்ட்நகர் கடற்கரையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்.
சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் நேற்று, மே-17 இயக்கத்தின் சார்பில் முள்ளிவாய்க்கால் படுகொலையின் 14-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அரிபரந்தாமன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நினைவேந்தல் தீப்பந்தத்தை ஏற்றினார். இதைத்தொடர்ந்து, வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழீழத்தில் லட்சக்கணக்கான தமிழர்களை ராஜபக்சே அரசாங்கம் குண்டுகளை வீசியும், பட்டினி போட்டும் கொன்றார்கள். உலக வரலாற்றில் இப்படிப்பட்ட படுகொலை நடந்ததில்லை என்று சொல்லும் வகையில் 1 லட்சத்து 37 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். கனடா நாட்டின் பிரதமர் கடந்த ஆண்டு அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர் இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து ஒரு தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றினார். கனடா இந்த படுகொலைக்கு எவ்வாறு குரல் கொடுக்கிறதோ அதுபோல எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் இந்த தமிழ் இனப்படுகொலையை சுட்டிக்காட்ட வேண்டும். இந்த படுகொலைக்கு காரணமான சிங்கள அரசுக்கு உரிய தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். அடைபட்டு கிடக்கும் தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். இலங்கையில் தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பை உலகம் முழுவதும் நடத்த வேண்டும்.
இந்த தமிழர் கடற்கரையில் ஒளிச்சுடரை தூக்கிப் பிடித்துள்ளோம். இந்த ஒளிச்சுடர் எப்படி எங்கள் மனதில் அணையாமல் இருக்கிறதோ அதுபோல ஆண்டுதோறும் வருவோம். இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சுதந்திர தமிழ் இனச்சுடர் ஓங்கி ஒளிக்கின்ற வரை இந்த கடற்கரைக்கு வருவோம். இந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்த தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உணர்வு பட்டுப் போகாமல் மென்மேலும் சுடர் விட்டு பிரகாசிக்க தொடர்ந்து குரல் கொடுப்போம். சுதந்திர தமிழீழத்திற்கு பாதை அமைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.