புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காததற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:-
புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கே அழைப்பில்லை; பாஜக-ஆர்எஸ்எஸ் ஆட்சியில் குடியரசு தலைவர் மாளிகை டோக்கனிசமாக மாறியுள்ளது. தலித், பழங்குடி சமுதாயத்தினரை ஜனாதிபதியாக பாஜக தேர்ந்தெடுத்தது தேர்தலுக்காக மட்டுமே. புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு அப்போதைய ஜனாதிபதி கோவிந்த்தை பாஜக அழைக்கவில்லை. தற்போது புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி முர்முவை பாஜக அரசு அழைக்கவில்லை.
இந்திய குடியரசின் உச்சபட்ச சட்டமியற்றும் அவை நாடாளுமன்றமே ஆகும். இந்தியக் குடியரசுத் தலைவர்தான் அரசியல் சட்ட ரீதியான உச்சநிலைத் தலைவராவார். நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதியே அரசு, எதிர்க்கட்சி, ஒவ்வொரு குடிமகனையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். எனவே புதிய நாடாளுமன்றத்தை ஜனாதிபதி திறந்தால் ஜனநாயகத்தின் அடையாளமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முதான் திறந்து வைக்க வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கக் கூடாது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காததற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.