எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுகவினர் மீது 3 பிரிவில் வழக்கு பதிவு!

எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுகவினர் 5,500 பேர் மீது சென்னை போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்தனர். சென்னையில் ஆளுநர் மாளிகைக்கு பேரணி சென்று தமிழக அரசுக்கு எதிராக புகார் மனு அளித்த நிலையில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர்குப்பம் மற்றும் செங்கல்பட்டு அருகே விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை அதே பகுதியை சேர்ந்தவர்கள் குடித்து 23 பேர் அடுத்தடுத்து பலியாகினர். மேலும் 30க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து சமீபத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பலியாக இது அமைந்துள்ளது. இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளதோடு, அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.

இந்தநிலையில் தான் கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்என்ரவியை நேரில் சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளதாக அதிமுக அறிவித்தது. அதன்படி அதன்படி அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் நேற்று சென்னையில் பேரணியாக ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்டனர். இந்த பேரணியில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்பி வேலுமணி, ஜெயக்குமார், சிவி சண்முகம் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து வந்த அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். பேரணி முடிவில் அவர்கள் ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்து தமிழக அரசுக்கு எதிராக புகார் மனு அளித்தனர்.

முன்னதாக பேரணியால் சென்னையில் நேற்று சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக தான் அதிமுகவினர் 5,500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் கூட்டம் சேர்த்தல் உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் உள்பட மொத்தம் 5,500 பேரில் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.