தமிழ்நாட்டில் 53 சதவீதம் வளர் இளம்பெண்களுக்கு ரத்தசோகை: மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் 53 சதவீதம் வளர் இளம்பெண்களுக்கு ரத்தசோகை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை, சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வளர் இளம் பருவத்தினருக்கான விழிப்புணர்வு மற்றும் சிறப்பு மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சி கூடுதல் கமிஷனர் சங்கர்லால் குமாவத், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், நிலைக்குழு தலைவர் சாந்தகுமாரி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் 106 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. அதில், மிக முக்கியமான அறிவிப்பாக வளர் இளம் பருவத்தினர் நல்வாழ்வை மேம்படுத்தும் வகையில் 25 ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சைதாப்பேட்டையில் 500 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் 10 முதல் 19 வயதுக்கு உட்பட்ட வளர் இளம் பருவத்தினருக்கு சுகாதார ஆலோசனைகள், விழிப்புணர்வு மற்றும் ரத்த சோகைக்கான பரிசோதனைகள் உள்ளிட்ட அனைத்து சிறப்பு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாட்டில் ரத்தசோகை பாதிப்பை பொறுத்தவரை வளர் இளம் பெண்களுக்கு 52.9 சதவீதம், ஆண்களுக்கு 24.6 சதவீதம் கண்டறியப்பட்டுள்ளது. ஆகையால் ரத்தசோகை பாதிக்கப்பட்ட வளர் இளம் பருவத்தினர்களை கண்டறிந்து 20 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சை வழங்குவதுடன் ரத்தசோகை இல்லா தமிழ்நாடாக மாற்றுவதே சிறப்பு முகாமின் நோக்கமாகும். தமிழ்நாடு முழுவதும் உள்ள 2 ஆயிரத்து 127 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு மாதத்திற்கு ஒரு முகாம் வீதம் 25 ஆயிரத்து 524 முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 கோடியே 2 லட்சம் பேர் பயனடைவார்கள். வளர் இளம் பருவத்தினருக்கான மருத்துவ முகாம்களின் கீழ் கொடுக்கப்படும் மருந்து மாத்திரைகளை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் முன்னிலையில் டாக்டரின் அறிவுரையின்படி எடுத்துக்கொள்ள வேண்டும். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஊட்டியில் இரும்பு சத்து மாத்திரைகளை அதிக அளவில் ஒரு மாணவி எடுத்துக்கொண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டார். எனவே, டாக்டர்களின் வழிகாட்டுதலின்படி மாத்திரைகளை கவனமாக உட்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.