டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் மகாராஷ்டிரத்தின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை நேரில் சந்தித்துப் பேசினர்.
டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. மத்திய அரசின் இந்த அவசர சட்டத்துக்கு எதிராக டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு திரட்டி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாருடனான சந்திப்பு நடந்தது. நேற்று அவர் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானுடன் கொல்கத்தா சென்று மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை சந்தித்தார். கெஜ்ரிவாலின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் மகாராஷ்டிரத்தின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை நேரில் சந்தித்துப் பேசினர். மும்பையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், உத்தவ் தாக்கரேவுடன், சஞ்சய் ராவத்தும் கலந்துகொண்டனர். இதில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஒன்றிணைவது குறித்தும் மாநில அரசின் உரிமைகளை காப்பது குறித்தும் பேசப்பட்டது.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை உத்தவ் தாக்கரே மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூட்டாக சந்தித்தனர். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், டெல்லி அரசின் நிா்வாக அதிகாரங்கள் தொடா்பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் இருக்க எங்களுக்கு ஆதரவு அளிப்பதாக உத்தவ் தாக்கரே வாக்குறுதி அளித்துள்ளார். வருகின்ற 2024 தேர்தலில் மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வராது எனத் தெரிவித்தார்.