முதல்வர் வெளிநாட்டு பயணத்தால் வரும் அந்நிய முதலீடு ஆபத்தானது என்றும் அதை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான கேளவி எழுப்பி உள்ளார்.
புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக அவரிடம் முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சீமான், ஏற்கெனவே சென்ற வெளிநாட்டு பயணத்தால் எவ்வளவு முதலீடு வந்திருக்கிறது? அந்நிய முதலீடு, வெளிநாட்டவர் முதலீடு என்று சொல்வதே ஆபத்தானது என்றார்.
கப்பலில் வர்த்தகம் செய்தவர்களிடம் வரி கேட்டுவிட்டு, விமானத்தில் வர்த்தகம் செய்பவர்களை வா வா என்று அழைக்கிறார்கள். ஒரு நாட்டுக்கு அன்றைக்கு அடிமையாக இருந்த நம் நாடு, இன்று உலக நாடுகளுக்கு அடிமையாக இருக்கத் துடிக்கிறது. இது என்ன விடுதலை? இது என்ன சுதந்திரம்? என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
மேலும் கூறிய சீமான், முதல்வர் வெளிநாடுகளுக்கு ஒரு பயணம் செய்து பார்த்துவிட்டு வரலாம். ஒரு வாரம் பத்து நாட்களுக்கு மேலாக துபாய், அரபு நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து முதலீடுகள் வரப்போகுது என்று சொல்கிறார்கள். அதை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று சொல்லுங்கள். சிப்காட் என்கிறார்கள், என்னென்ன தொழிற்சாலைகள் அங்கு உள்ளது? யார் அதில் வேலை செய்கின்றனர்? என்று சொல்லுங்கள் என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.
சிறப்பு பொருளாதார மண்டலம் என்று ஒன்றை சொன்னார்கள். அதில் மக்களுக்கு என்ன வளர்ச்சி இருக்கிறது? ஆனாலும், இலவச அரிசி, இலவச பஸ் பாஸ், குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய், கல்லூரியில் படிக்கிற மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் தர வேண்டியிருக்கிறது தானே? பிறகு எதற்கு வளர்ச்சி வளர்ச்சியென்று பேசுகிறீர்கள்? என்று செய்தியாளர் சந்திப்பில் சீமான் சாடினார்.
இதனிடையே செய்தியாளர்கள், விஷச் சாராயம் அருந்தி 22 பேர் பலியான சம்பவம் குறித்து ஆளுநரிடம் தமிழக அரசுக்கு எதிராக அதிமுகவும் பாஜகவும் மனு கொடுத்தது குறித்து கேட்டார்கள். அதற்கு பதிலளித்த சீமான், “எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி காலத்திலும், இந்த கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டது. டாஸ்மாக் கடைகளும் அப்போதும் ஓடியது. அவருடைய ஆட்சிக் காலத்தில் விஷச் சாராயம் இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் நல்வாய்ப்பாக யாரும இறந்து போகவில்லை. எனவே, தற்போது நடந்த சம்பவத்தை பயன்படுத்திக் கொண்டு ஆளுநரிடம் சென்று எடப்பாடி மனு கொடுத்துள்ளார். ஆளுநருக்கு எதற்காக அவ்வளவு பெரிய அதிகாரத்தைக் கொடுத்து கோரிக்கை வைக்கிறீர்கள்? ஆளுநருக்கு அந்த பதவியை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தவர் ஆளுங்கட்சியின் பிரதமர். அவரிடம் சென்று பதவிநீக்க கோரிக்கையை வைக்கிறீர்கள். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது தான், கோடநாடு கொலை நடந்தது. எனவே அதற்கு பொறுப்பேற்று தார்மீகமாக எடப்பாடி விலக வேண்டும் எனக்கூறி ஆளுநரிடம் மனு கொடுக்கலாமா? இந்த விவகாரத்தை மக்கள் ஆழந்து கவனித்துக் கொண்டுள்ளனர். அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் செந்தில்பாலாஜி தோற்க வேண்டுமா? அல்லது இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டுமா? என்பதை மக்கள்தான் முடிவெடுப்பார்கள். அதிமுகவும், பாஜகவும் குற்றம்சாட்டுவதால், அவரை மாற்றப்போகிறார்களா? என்ன? என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.