எல்லாம் நானே என்றால் நாட்டில் சட்டங்கள் எதற்கு? என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை வரும் மே 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். 64 ஆயிரத்து 500 சதுர அடியில் முக்கோண வடிவில் நான்கு மாடிகளுடன் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. நாட்டின் முதல் குடிமகளான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முதான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இதனை மத்திய அரசு ஏற்காததால் நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். 19 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ள நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி தான் திறந்து வைப்பார் என உள்துறை அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது டுவிட்டர் பதிவில், “பெண் ஆதிவாசி குடியரசுத் தலைவருக்கு அவமதிப்பு. நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் புறக்கணிப்பு. நாடாளுமன்றம் வெறும் செங்கல் சிமிண்ட் இல்லை பிரதமரே.. ஜனநாயகத்தின் சின்னம். 19 எதிர்க்கட்சிகளின் கண்டனம் தேசத்தின் குரல். அரசியல் சாசன சட்ட விதி 79-ஐ மதிக்க வேண்டாமா? புதிய நாடாளுமன்றத்தின் முதல் பணியே குடியரசுத் தலைவரை அவமதிப்பதா? கட்டிடப் பணியை துவக்கும் பொழுதும், முடிக்கும்போதும் சிங்கத்தின் கோரப்பற்களில் ஜனநாயக மாண்புகளின் குருதி படிவதா? எல்லாம் நானே என்றால் நாட்டில் சட்டங்கள் எதற்கு?” என்று தெரிவித்துள்ளார்.