3 அணிகளும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திப்போம்: சசிகலா

நாடாளுமன்றத் தேர்தலின் போது 3 அணிகளும் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்திப்போம் என சசிகலா தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மருத்துவர் சிவக்குமார் – பிரபா தம்பதியரின் மகன் திருமண விழாவில் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா இன்று கலந்துகொண்டு மணமக்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா கூறியதாவது:-

இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 3 வருடங்களில் இந்த பெருமைமிகு கட்டிடத்தை கட்டி முடித்துள்ளனர். இதனை பிரதமர் திறந்து வைக்க உள்ளார். எதிர்க்கட்சிகள் இதனை இந்தியாவின் பெருமை என நினைக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் தங்கள் இருப்பை காட்டிக்கொள்ளவே புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணித்துள்ளன.

மாற்றத்தை 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது பார்க்க முடியும். ஒரு கட்சியில் தொண்டர்களின் விருப்பம் தான் எப்போதும் வெற்றி பெரும். அதிமுக தொண்டர்களின் விருப்பம் என்ன என்பது தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். கட்சித் தொண்டர்களின் ஆதரவு, பொதுமக்களின் ஆதரவு இரண்டும் இருந்தால் தான் அரசியலில் தலைமைப் பதவிக்கு வரமுடியும். வரும் காலத்தில் தேர்தல்களின்போது அதனைப் பார்க்கலாம். ஓபிஎஸ்ஸை சந்திப்பதற்கு எனக்கு எந்த தடையும் இல்லை. எல்லோரையும் ஒன்றாகச் சேர்த்து கொண்டு செல்வதுதான் என்னுடைய வேலை. இதை நான் ஜெயலலிதா – ஜானகி பிளவு ஏற்பட்டபோது கூடச் செய்திருக்கிறேன். நான் நினைத்ததை முடித்துக்கொண்டே வருகிறேன்.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கள்ளச்சாராய மரண நிகழ்வுகளை பார்த்திருக்க முடியாது. தமிழ்நாட்டை அதிமுகவால் மட்டுமே காப்பாற்ற முடியும். 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.