சிதம்பரத்தில் குழந்தைகளுக்கு விரல் பரிசோதனை நடைபெறவில்லை என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தகவல் வெளியிட்டு உள்ளது. விரல் பரிசோதனை நடந்ததாக ஆளுநர் ரவி சொன்ன நிலையில் மறுப்பு தெரிவித்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தகவல் வெளியிட்டு உள்ளது.
தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய குழு உறுப்பினர் ஆனந்த் சிதம்பரத்தில் நடத்திய விசாரணைக்கு பின் மறுப்பு தெரிவித்துள்ளார். தீட்சிதர்களிடம் நடத்திய விசாரணையின் முடிவில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் எதையும் செய்யவில்லை, தமிழ்நாடு அரசு அவர்கள் மீது பழிவாங்கும் விதமாக நடவடிக்கை எடுக்கிறது என்று ஆளுநர் ஆர். என் ரவி சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக டைம் ஆப் இந்தியா ஊடகத்திற்கு தமிழ்நாடு அரசுக்கு எதிராக ஆளுநர் ஆர். என் ரவி அளித்த பேட்டியில், கோவில்களை சிறப்பாக நிர்வகிப்பதற்காக நான் இந்த தமிழ்நாடு பாராட்ட வேண்டும் என்று அரசாங்கம் விரும்பியது. அதற்கு அவர்கள் கூறிய காரணம், 3,000க்கும் மேற்பட்ட ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டெடுத்ததுதான். அதை ஏற்றுக்கொள்கிறேன். அவ்வளவு நிலங்களை மீட்டது நல்ல விஷயம்தான். ஆனால் இன்னும் 50,000 ஏக்கருக்கும் அதிகமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதை எல்லாம் மீட்கவில்லை. இதுவரை செய்யப்பட்ட மீட்பு மிகவும் சிறியதாக உள்ளது என்பதை எல்லோரும் அறிவோம். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இல்லாத சிதம்பரம் நடராஜர் கோவிலில் 2022ல் என்ன நடந்தது என்று பாருங்கள். பழிவாங்கும் வகையில், சமூக நலத் துறையின் அரசு அதிகாரிகள், பொது தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். அங்கே குழந்தைத் திருமணங்கள் நடப்பதாக எட்டு பேர் மீது புகார்களை அளித்தனர். தீட்சிதர்கள் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள் என்று புகார் வைத்தனர். ஆனால் அங்கே அத்தகைய திருமணங்கள் நடக்கவில்லை. அது உண்மை இல்லை. பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், ஆறாம், ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை, வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, ‘இரண்டு விரல் பரிசோதனை’ என்னும் கன்னித்தன்மை பரிசோதனை செய்து உள்ளது. இந்த கொடுமைகளால் அந்த சிறுமிகள் சிலர் தற்கொலைக்கு முயன்றனர். இது என்ன என்று கேட்டு முதல்வருக்கு கூட நான் விளக்கம் கேட்டு கடிதம் எழுதினேன். இப்போது, நடக்கும் அனைத்திற்கும் பின்னணியில் இருப்பது அரசுதான். நான் இந்த அரசாங்கத்தைப் பாராட்ட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? என்று ஆளுநர் ஆர். என் ரவி கேட்டு உள்ளார்.
அங்கே விரல் பரிசோதனை நடந்ததாக ஆளுநர் ரவி கூறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அரசு நேரடியாக தலையிட்டு ஆளுநர் சொன்னது பொய் என்று பதில் அளித்தது. அதோடு மருத்துவர்கள் சங்கமும் ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவும் அங்கே விரல் பரிசோதனை நடக்கவில்லை என்று கூறினார்.
இந்த நிலையில் சிதம்பரத்தில் குழந்தைகளுக்கு விரல் பரிசோதனை நடைபெறவில்லை என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தகவல் வெளியிட்டு உள்ளது. விரல் பரிசோதனை நடந்ததாக ஆளுநர் ரவி சொன்ன நிலையில் மறுப்பு தெரிவித்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தகவல் வெளியிட்டு உள்ளது. தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய குழு உறுப்பினர் ஆனந்த் சிதம்பரத்தில் நடத்திய விசாரணைக்கு பின் மறுப்பு தெரிவித்துள்ளார். தேசிய குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த் மற்றும் மருத்துவ குழுவினர் மேற்கொண்ட விசாரணையில் அப்படி எதுவும் சோதனை நடக்கவில்லை என்று குழந்தைகள் மற்றும் தீட்சிதர்கள் ஒப்புக்கொண்டனர். பிரைவேட் சோதனை மட்டுமே நடைபெற்றதாக அவர்கள் விசாரணையில் கூறி உள்ளனர. அங்கே குழந்தைகள் திருமணம் தொடர்பாக விசாரிக்கப்படும் என்றும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய குழு உறுப்பினர் ஆனந்த் கூறியுள்ளார்.