அமுல் நிறுவனத்தின் செயல்பாடு, ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதியில் பாதிப்பினை ஏற்படுத்தும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்
தமிழ்நாட்டில், ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்திட வலியுறுத்தி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (அமுல் நிறுவனம்) இதுநாள்வரையில் தங்களது தயாரிப்புகளை தமிழ்நாட்டில் உள்ள அவர்களுடைய விற்பனை நிலையங்கள் வாயிலாக மட்டுமே விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில், பால் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் அந்நிறுவனம் பால் கொள்முதல் செய்வதால் எழும் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி, உள்துறை மந்திரி அமித்ஷா உடனடியாகத் தலையிட்டு, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். பிற மாநிலங்களில் திறம்படச் செயல்படும் பால் கூட்டுறவு சங்கங்களைப் போலவே, தமிழ் நாட்டிலும் 1981-ம் ஆண்டு முதல், மூன்றடுக்கு பால் கூட்டுறவு அமைப்பு திறம்பட செயல்பட்டு வருவதாகவும், ஆவின் நிறுவனம் தலைமைக் கூட்டுறவு விற்பனை இணையமாக செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
ஆவின் நாளொன்றுக்கு 35 லட்சம் லிட்டர் பாலினை 4.5 லட்சம் உறுப்பினர்களிடமிருந்து கொள்முதல் செய்கின்றன. இந்தச் சூழ்நிலையில், அமுல் நிறுவனம், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவியுள்ளது குறித்தும், தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது குறித்தும் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல்பாடு, ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதியில் பாதிப்பினை ஏற்படுத்தும். அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல், பால் மற்றும் பால் பொருட்களைக் கொள்முதல் செய்து விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கிவிடும். எனவே, உள்துறை மந்திரி அமித்ஷா உடனடியாகத் தலையிட்டு, தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதிகளில், அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதைத் தடுத்து நிறுத்திட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.