தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூரில் தமிழர்கள் மத்தியில் உரையாற்றினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூரில் “வேர்களைத் தேடி” என்ற அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான திட்டத்தை தொடங்கி வைத்து, உரையாற்றினார். சிங்கப்பூர் தமிழ்ச்சங்களுடன் இணைந்து நடைபெற்ற தமிழ் கலை பண்பாட்டு நிகழ்ச்சியில் முதல்வர் பேசியதாவது:-
கடல் கடந்து சிங்கப்பூருக்கு வந்திருப்பதாக நான் நினைக்கவில்லை. தமிழ்நாட்டுக்குள்ளே இருப்பதாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அந்தளவுக்கு சிங்கப்பூர் என்பது என் சிந்தைக்கு இதமான ஊராக அமைந்திருக்கிறது. சாதாரண நிலையில் இருந்த சிங்கப்பூரை உலகம் போற்றும் நாடாக மாற்றிக் காட்டியவர்கள் இந்த நாட்டின் பிரதமர்கள். லீ குவான் யூ அவர்களின் புகழ் இன்று வரை நீடித்து நிலைத்து இருக்கிறது. இந்தியாவுடனான வணிகத் தொடர்பையும் அவர் வளர்த்தார். இந்திய வணிகத் தொடர்பை வளர்த்ததில் முந்தைய பிரதமர் கோ சோக் தோங்கிற்கு (Goh Chok Tong) பெரும் பங்குண்டு. இன்றைய பிரதமர் லீயும் தொடர்ந்து அதனை நிலைக்கச் செய்கிறார். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை நோக்கி சிங்கப்பூர் நிறுவனங்களை ஈர்ப்பதற்காக நான் வருகை தந்துள்ளேன்.
சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட புலம்பெயர் நாடுகளில் உள்ள எழுத்தாளர்கள் எழுதும் நூல்களை வாங்கித், தமிழ்நாட்டு நூல் நிலையங்களில் வைப்பது. புலம்பெயர் நாடுகளில் உள்ள இளைஞர்களைத் தமிழ்நாட்டுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லுதல். புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ்ச் சான்றோர்களை அறிஞர்களை பேராசிரியர்களை மதித்து விருது வழங்குதல். கலைகள், பண்பாட்டுப் பரிமாற்றம், நாட்டுப்புறக் கலைஞர்களை புலம்பெயர் நாடுகளுக்கு அனுப்பி ஊக்குவித்தல். பண்பாட்டுப் பரிமாற்றம் பெருக பல கண்காட்சிகளை நடத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வைத்துள்ளீர்கள். இவை குறித்து தமிழ்நாடு சென்ற பின்பு ஆலோசித்து, முறையான அறிவிப்பை வெளியிடுவேன் என்ற உறுதிமொழியை நான் இங்கே தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். எனது அன்பு வேண்டுகோள் என்பது, இங்குள்ள தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து அவர்களின் வணிக வளத்தைப் பெருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். அதற்கான வசதிகள், அனுமதிகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு செய்துகொடுக்கும் என்று உறுதி கூறுகிறேன்.
அடுத்து, சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படும் லீ குவான் யூ அவர்களால் தான் தமிழர்களும் தமிழும் இங்கு உயர்வை அடைந்தது. நம்முடைய பேரறிஞர் அண்ணாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டவர் லீ குவான் யூ. சிங்கப்பூரில் அண்ணாவின் உரையைக் கேட்ட லீ குவான் யூ, தனது மூத்த சகோதரர் என்று பாசத்தோடு குறிப்பிட்டார். அதுமட்டுமல்ல, தனது அலுவலகத்துக்கு அண்ணாவை அழைத்து விருந்து கொடுத்தார். அதனால்தான் லீ குவான் யூ இறந்தபோது சிங்கப்பூரின் நாயகன் என்று போற்றினார் கலைஞர். ஆகவே ஒரு மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். லீ குவான் யூ அவர்களுக்கு தமிழ்நாட்டில் நினைவுச் சின்னம் எழுப்ப நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம். இது தமிழ்நாட்டில் மன்னார்குடியில் அமைய இருக்கிறது. சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பகுதியினர் மன்னார்குடி, பட்டுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்கள். எனவே, லீ குவான் யூ பெயரால் நூலகமும் சிலையும் மன்னார்குடியில் அமையும் என்பதை மகிழ்ச்சியுடன் நான் மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.
சிங்கப்பூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று டமாசெக், செம்ப்கார்ப், கேப்பிட்டா லேண்ட் ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்கள் மற்றும் சிங்கப்பூர் மந்திரி ஈஸ்வரனையும் சந்தித்து பேசினார். அதன் பின்னர் அங்கு முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகின. அதாவது, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூர் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை நிறுவனத்திற்கும் இடையே ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு, பல்கலைக்கழக ஒத்துழைப்பு, அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு, தமிழ்நாட்டில் தொழில்துறைகளின் ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு ஆதரவு போன்றவற்றில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகம் மற்றும் தமிழ்நாடு அரசின் சிப்காட் நிறுவனத்திற்கும் இடையே பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சியில் ஒத்துழைப்பை ஏற்படுத்துதல் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 700 பேருக்கு வேலைவாய்ப்பு சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகத்திற்கும், தமிழ்நாட்டின் பேம் டி.என். மற்றும் டான்சிம் நிறுவனங்களுக்கும் இடையே தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப தொடர் கல்விக்கான திறன் மேம்பாடு, ‘ஸ்டார்ட்அப் டி.என்.’ மூலம் ‘ஸ்டார்ட்-அப்’ பொருளாதார செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு கூட்டாண்மைகளை எளிதாக்குதல் போன்றவற்றிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூரை சேர்ந்த ‘ஹய்-பி இன்டர்நேஷனல்’ நிறுவனத்திற்கும் இடையே ரூ.312 கோடி முதலீடு மற்றும் 700 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மின்னணு பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழக நிறுவனத்திற்கும் இடையே தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பில் எதிர்கால மற்றும் தொழில்துறைக்கு தேவையான பாடத்திட்டம் மற்றும் பாட மேம்பாட்டிற்கான அறிவுப் பங்குதாரராக நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கும், சிங்கப்பூரை சேர்ந்த ஐ.டி.இ. கல்வி சேவைகள் நிறுவனத்திற்கும் இடையே தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி துறையில் நீண்ட கால கூட்டாண்மையை நிறுவுதல், தமிழ்நாட்டில் தொழிற்சாலை திறன் பள்ளிகளை அமைத்தல் மற்றும் மேலாண்மை செய்தல் போன்றவற்றிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
சிங்கப்பூரை நாங்கள் வெளிநாடாக நினைப்பது இல்லை. ஏனென்றால் எங்களது தாய்மொழியாம் தமிழ் மொழி, ஆட்சி மொழியாக இருக்கும் நாடு சிங்கப்பூர். சிங்கப்பூருக்கும், தமிழ்நாட்டிற்கும் தொன்று தொட்டே சிறப்பான உறவு உள்ளது. சிங்கப்பூரின் அனைத்து அரசு பள்ளிகளிலும் தொடக்கநிலை முதல் இளநிலை கல்லூரி நிலை வரை தமிழ் 2-வது மொழியாக கற்பிக்கப்படுகிறது என்பது தமிழ்ப்பேச்சே எங்கள் மூச்சு என்று வாழ்ந்து வரும் எங்களுக்கு ‘தேன் வந்து பாயுது எங்கள் காதினிலே’ என்பதைப் போன்ற இனிய செய்தி. சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்துறை மந்திரி ஈஸ்வரன் சென்னை வந்தபோது, என்னைச் சந்தித்தார். அவரது பண்பினால் மகிழ்ந்து போன நான், அடுத்த பயணமாக சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டேன். அவர் என்னைச் சந்தித்தபோது தமிழ்நாடு மற்றும் சிங்கப்பூர் இடையிலான பொருளாதார உறவுகள், பண்பாடு மற்றும் வர்த்தகம் பற்றி மிக விரிவாக பேசினோம்.
தமிழ்நாட்டின் முக்கிய முதலீட்டாளர்களில் சிங்கப்பூரும் ஒன்று என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 30 சிங்கப்பூர் நிறுவனங்கள் உள்ளன. அசெண்டாஸ் நிறுவனம், தரமணியில் ஒரு மிகப்பெரும் ஐ.டி. பார்க் நிறுவியுள்ளது. டமாசெக், டி.பி.எஸ். வங்கி, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் மேப்பில் டிரி போன்ற பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் வணிகம் புரிந்து வருகின்றன. சிங்கப்பூரை மையமாக கொண்ட நிறுவனங்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். கடந்த 2 வருடங்களில் தமிழ்நாட்டில் பல்வேறு துறை சார்ந்த முதலீட்டு ஊக்குவிப்பு நிகழ்வுகளை நடத்தி, இதுவரை 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளன. இதன் மூலம் ரூ.2 லட்சத்து 95 ஆயிரத்து 339 கோடி அளவுக்கு முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. 4 லட்சத்து 12 ஆயிரத்து 565 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உறுதியளிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டுமே ரூ.4 ஆயிரத்து 800 கோடி முதலீட்டில் 4 சிங்கப்பூர் நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. இதன் மூலம் 6 ஆயிரத்து 200 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இன்னும் பல திட்டங்களுக்கு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சிறப்பு என்னவென்றால், பல்வேறு வகைப்பட்ட நிறுவனங்களும் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதுதான். மின் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் போன்ற புதிய துறைகளிலும் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. எங்கள் மாநிலத்தின் சீரான மற்றும் பரவலான வளர்ச்சியை உறுதிசெய்யும் விதமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இந்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. துறைகளுக்கான கொள்கை நாங்கள் ஒவ்வொரு துறையையும் நன்கு ஆராய்ந்து, அத்துறைகள் சார்ந்து முதலீடு செய்யும் நிறுவனங்களுடன் ஆலோசனைகள் மேற்கொண்டு, அவர்கள் தேவைகளை கண்டறிந்து நிறைவு செய்திடும் வகையில், பல்வேறு துறைகளுக்கான கொள்கைகளை வெளியிடுகிறோம். எங்கள் மாநிலத்தில் பின்டெக் சிட்டி அமைப்பது போன்ற திட்டங்களை செயல்படுத்திட, உங்களின் இந்த ஆற்றலும், அனுபவமும் எங்களுக்கு மிகவும் தேவை. அதேசமயம் உங்களது வர்த்தக வரம்புகளும் விரிந்து பரவும்; பெருகும்.
தொழில் பூங்காக்கள் மேம்பாடு, தொழில் நகரியங்கள், தொழில் பெருவழித் தடங்கள், துறைமுகங்களை மேம்படுத்துதல், நகர்ப்புற உள்கட்டமைப்பு, கழிவுநீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை, கடல்நீரை நன்னீராக்கும் திட்டம், சுற்றுலா தொடர்பான திட்டங்கள் ஆகியவற்றில் சிங்கப்பூரின் ஒத்துழைப்பு தமிழ்நாட்டிற்கு மிக அவசியம் என்பதை சொல்ல விரும்புகிறேன். எங்களது முன்னேற்ற பயணத்தில் இணைந்து, அதற்கான திட்டங்களை செயல்படுத்த சிறப்பான பங்குதாரராக சிங்கப்பூர் கைகோர்த்திட வேண்டும் என்றும் உங்களை கேட்டுக்கொள்கிறோம்.
இப்போது தமிழ்நாட்டில் முதலீட்டுக்கு உகந்த சூழ்நிலை மிக பிரகாசமாக இருக்கிறது. வளர்ந்த நாடுகள் மட்டுமல்ல, வளர்ந்து வரும் நாடுகளும் இந்தியாவில் முதலீடு செய்ய முன் வருகின்றன. இத்துறைகளில், உங்களின் மேலான முதலீடுகளை நாங்கள் வரவேற்கிறோம். இன்றைய தினம், சிப்காட் மற்றும் சிங்கப்பூர் இந்தியா கூட்டுத்திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாகி உள்ளது. இதன் மூலம் தரமான உள்கட்டமைப்புக்கான கொள்கைகள் மற்றும் அளவுகோல்களை உருவாக்குதல், சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்துதல், கழிவுநீர் மேலாண்மை, மலிவு விலையில் இல்லங்கள், உள்கட்டமைப்பு அமைப்பதற்கான நிதி வசதி, பசுமை மயமாக்கல் மற்றும் பசுமைக் கட்டிடங்கள் போன்றவற்றை மேம்படுத்தி, அதன் மூலம், தொழில் பூங்காக்களின் தரத்தினை வெகுவாக மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். வந்தாரை வாழ வைத்த சிங்கப்பூர் எங்கள் தமிழ்நாட்டுக்கு வந்தும் வளப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.