அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனையிட சென்ற ஐடி அதிகாரிகள் மீதும், அவர்களை தாக்கியதாக கூறி திமுகவினர் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்து உள்ளது.
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கரூர், கோவை, சென்னை, ஐதராபாத் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் ஐடி அதிகாரிகள் நேற்று சோதனையை தொடங்கினர். அரசு ஒப்பந்ததாரர்கள், அவர்களின் உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டின் செல்வாக்கு மிகுந்த அமைச்சரான செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் ஐடி சோதனை நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கரூரில் சோதனையில் ஈடுபட சென்ற ஐடி அதிகாரிகளின் மீது அங்கு திரண்ட திமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் வந்த கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. இதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்த புகாரை தொடர்ந்து ஐடி சோதனை நடைபெற்ற இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நேற்றிரவு கரூர் துணை மேயர் தாரணி சரவணன் வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து திமுகவினர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று காலை தொடங்கிய வருமான வரித்துறை சோதனை விடிய விடிய நடைபெற்றது. இன்றும் 2 வது நாளாக சோதனை தொடர்ந்து வருகிறது. வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் 200 பேர் கரூருக்கு விரைந்து உள்ளனர். இதற்கிடையே சோதனையிட சென்ற பெண் அதிகாரி உட்பட 3 வருமான வரித்துறை அதிகாரிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மற்றொரு இடத்தில் நடைபெற்ற சோதனையில் ஒரு அதிகாரி தாக்கப்பட்டு உள்ளார். இவர்கள் 4 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், வருமான வரித்துறை சோதனையின்போது தாக்குதல் நடத்தியதாக கரூர் நகர காவல் நிலையத்தில் அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் 50 பேர் மீது அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது, சோதனையின் போது ஒன்றாகக் கூடியது, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், திமுக பிரமுகர் அளித்த புகாரின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக தொண்டரை வருமான வரித்துறை அதிகாரி தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் மீது, கையால் தாக்கியது, தகாத வார்த்தைகளில் திட்டியது ஆகியவற்றிற்காக ஐபிசி 294 பி, 323 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.