சிதம்பரம் சிறுமிக்கு இருவிரல் பரிசோதனை செய்ததாக எழுந்த புகாரில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரி உண்மைக்கு புறம்பான கருத்தை கூறுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை, திருவான்மியூரில் உள்ள இந்திய டாக்டர்கள் கூட்டுறவு மருந்து செய்நிலையம் மற்றும் பண்டக சாலை (இம்காப்ஸ்) தலைமை அலுவலகத்தில் மருந்துகள் உற்பத்தி செய்யும் முறையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர், இம்காப்ஸ் நிறுவனத்திற்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, டாம்கால் பொது மேலாளர் மோகன்ராஜ், மண்டல குழுத்தலைவர் துரைராஜ், இம்காப்ஸ் தலைவர் கண்ணன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த ஆண்டு இம்காப்சில் தயாரிக்கப்பட்ட மருந்துகளின் விற்பனை ரூ.55 கோடியை நெருங்கி உள்ளது. இந்த விற்பனையை வரும் ஆண்டுகளில் ரூ.100 கோடிக்கு கொண்டுசெல்வதே இலக்கு ஆகும். இம்காப்ஸ் நிர்வாகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடும் வகையில் 43 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கவர்னர் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், சிதம்பரத்தில் உள்ள சிறுமிக்கு இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவலை கூறினார். உடனடியாக மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன்தான் செய்யப்பட்டது, இருவிரல் பரிசோதனை செய்யப்படவில்லை என்றும் மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த பிரச்சினை தொடர்பாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணை அதிகாரிகளிடம் சட்டத்திற்கு அப்பாற்பட்ட இருவிரல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று டாக்டர்கள் தெளிவுபடுத்தி உள்ளார்கள். ஆனால், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அலுவலர் டாக்டர் ஆனந்த் இந்த உண்மையைக் கருத்தில் கொள்ளாமல் யாரையோ திருப்திபடுத்த தவறான கருத்தை கூறியுள்ளார். இவ்வாறு ஒரு ஆணையம் உண்மைக்கு புறம்பான கருத்தை வெளியிடுவது தவறான செயலாகும்.
எந்த துறையிலும் தவறு நடந்துவிடக்கூடாது என்பதில் முதல்-அமைச்சர் மிகக்கவனமாக உள்ளார். ஆணையத்தின் விசாரணைக்கு மருத்துவத்துறை முழு ஒத்துழைப்பு வழங்கி உள்ளது. அனைத்து கேள்விகளுக்கும் டாக்டர்கள் அந்த அதிகாரியிடம் மிகத் தெளிவான விளக்கத்தை தெரிவித்துள்ளார்கள். பல்வேறு தகவல்களை தெரிவித்த பிறகு முழுமையாக திருப்தி அடைந்த அவர் வெளியில் சொல்லும்போது கவர்னருக்கு ஆதரவாக செய்தி வெளியிடுவது ஏற்கத்தக்கது அல்ல. இது ஆணையத்திற்கு அவர் செய்யும் மிகப்பெரிய அநீதியாகும். மேலும், கிண்டியில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு பன்னோக்கு உயர்சிறப்பு ஆஸ்பத்திரி திறப்பு விழாவிற்கு ஜனாதிபதியிடம் தேதி கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.