இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளான இன்று டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினர்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரும், காங்கிரஸ் தலைவருமான ஜவஹர்லால் நேருவின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. 1988 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி பிறந்த ஜவஹர்லால் நேரு, இந்திய சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். மகாத்மா காந்தியுடன் சேர்ந்து இந்திய சுதந்திரத்துக்காக தீவிரமாக போராடினார். நாடு சுதந்திரம் அடைந்தவுடன் முதல் இந்திய பிரதமராக பதவியேற்று, நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்டார் நேரு. சுதந்திரம் அடைந்தவுடன் நிலவிய பொருளாதார சிக்கல்கள், நிர்வாக குறைபாடுகள், உள்கட்டமைப்புகள் போன்றவற்றை ஏற்படுத்தினார் நேரு. பக்க வாதம் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு 1964 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி அவர் காலமானார்.
ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளான இன்று, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். டெல்லியில் இன்று காலை முதலே மழை பெய்துகொண்டு இருந்த நிலையில் கொட்டும் மழையில் தலைவர்கள் நேரு நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள். முதலில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மலர் தூவி மரியாதை செலுத்தும்போது அவரது உதவியாளர் அவருக்கு கொடை பிடித்துக்கொண்டு நின்றார். அவருக்கு பின்னால் மரியாதை செலுத்த காத்திருந்த ராகுல் காந்தி தூரல் மழையில் நனைந்தபடி நின்றுகொண்டு இருந்தார். மல்லிகார்ஜுன கார்கே மரியாதை செலுத்திவிட்டு நகர்ந்த பிறகு, ராகுல் காந்தி மழையில் நனைந்துகொண்டே மலர் தூவி மரியாதை செலுத்தினார்.