கரூரில் கான்ட்ராக்டர் ஆபீசில் பூட்டை உடைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு!

கரூரில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அவரது தம்பி அசோக்கிற்கும் நெருக்கமான அரசு ஒப்பந்ததாரரின் அலுவலக கதவு திறக்கப்படாததால், பூட்டை உடைத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக ரெய்டில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக், மின்துறை ஒப்பந்ததாரர்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 26-ஆம் தேதி காலை முதல் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். 4-வது நாளான நேற்று கரூர், சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட 25 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி வீடு, அலுவலகம், கரூர் காந்தி நகரில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்த் வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறையின் சோதனை நடைபெற்றது.

கரூர் வடக்கு காந்திகிராமம் முல்லைநகரில் உள்ள அவரது அக்கவுண்டன்ட் ஷோபனா பிரேம்குமாரின் வீடு ஆகிய இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஷோபனாவை அவரது வீட்டில் இருந்து அவர்களது காரில் வெளியே அழைத்து சென்று விசாரித்துள்ளனர். 1 மணி நேரத்துக்கு பிறகு அவரை அழைத்து வந்து அவரது வீட்டில் கொண்டு வந்து விட்டுள்ளனர். கரூர் செங்குந்தபுரம் 80 அடி சாலையில் உள்ள எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்த்தின் அலுவலகத்தில் சோதனையிட 5 வாகனங்களில் 25-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். ரெய்டு குறித்து தகவல் அளித்துவிட்டு காத்திருந்தனர். ஆனாலும், யாரும் கதவை திறக்காததால் போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர் முன்னிலையில் ஐ.டி அதிகாரிகள், அலுவலக பூட்டை உடைத்தனர். பின்னர் உள்ளே சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த், கரூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், ‘சங்கர் ஆனந்த் இன்பரா’ என்ற பெயரில், அரசு ஒப்பந்த பணிகளை செய்கிறார். இவர், செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமாருக்கும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. கரூர் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரி எதிரே உள்ள சுரேந்தர் மெஸ், அதன் மாடியில் உள்ள நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்றது. அனைத்து இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

கோவை மாவட்டத்தில் நேற்று கோல்டுவின்ஸ் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவரான செந்தில் கார்த்திகேயன் வீடு மற்றும் ரேஸ் கோர்ஸ் சாலை பகுதியில் அமைந்துள்ள அமைச்சரின் நண்பரான அரவிந்தன் என்பவருக்கு சொந்தமான இடங்கள் தவிர மேலும் 3 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். வருமானவரித்துறை சோதனை கோவையில் இன்றும் தொடர்கிறது. அதேபோல், தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் ஏற்றிச் செல்லும் வாகனங்களை இயக்கும் ஒப்பந்ததாரரான, ஈரோட்டைச் சேர்ந்த சச்சிதானந்தத்தின் வீட்டில் 4-வது நாளாக நேற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நேற்று காலை 11 மணியளவில் 3 வருமானவரித்துறை அதிகாரிகள், சச்சிதானந்தத்தை வாகனத்தில் வெளியில் அழைத்துச் சென்றனர். ஈரோட்டில் அவர் கணக்கு வைத்துள்ள வங்கி லாக்கரில் சோதனை மேற்கொள்வதற்காக, அவரை வருமான வரித்துறையினர் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவரிடம் இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னை, கரூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.