மேகதாது அணை கட்ட விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன் என கர்நாடகா துணை முதல்வரும், அம்மாநில நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வரும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே. சிவக்குமார் கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நேற்று பெங்களூரில் முதன்முறையாக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, கர்நாடக அரசின் நீர்ப்பாசன திட்டங்களுக்கு மத்திய அரசின் அனுமதியை பெற முயற்சி செய்ய வேண்டும். இது தான் நான் அமைச்சரான பிறகு உங்களுக்கு விதிக்கப்படும் முக்கியமான இலக்கு. மேகதாது, மகதாயி திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாது திட்டத்திற்கு அரசு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கியது. அதை நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு பயன்படுத்தவில்லை எனத் தெரிகிறது. ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள தீவிரமாக உழைக்க வேண்டும். ஏதாவது தேவை என்றால் பிரதமர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து பேசுவேன் எனத் தெரிவித்துள்ளார் டிகே சிவக்குமார்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி மக்களுக்கு அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் விரைவில் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார். மேலும் கர்நாடக மாநிலத்தில் நீண்ட நாளாக நிலுவையில் உள்ள முக்கிய திட்டமான மேகதாது அணை மற்றும் மகதாயி அணை திட்டத்தை அமல்படுத்த தான் விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து அனுமதி பெற தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். மேகதாது அணை கட்டுவது தங்களது உரிமை என்றும், அதுவே குறிக்கோள் என்றும் வேறு மாநிலங்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம் தங்களுக்கு கிடையாது என்றும் கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.