எம்பி பதவியையே பறிப்பாங்கன்னு நினைக்கவே இல்லை: ராகுல் காந்தி!

தாம் அரசியலுக்கு வந்த போது இந்தியாவில் ஒரு எம்.பி. பதவியையே பறிக்கின்ற நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என தாம் நினைக்கவே இல்லை என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

10 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி இந்தியர்கள், மாணவர்களிடையே தொடர்ந்து கலந்துரையாடி வருகிறார். அமெரிக்காவின் Stanford University-ல் இந்திய மாணவர்களிடையே இன்று ராகுல் காந்தி பேசியதாவது:-

அவதூறு வழக்கில் கிரிமினல் தண்டனை விதிக்கப்பட்ட முதல் நபர் நான். நாடாளுமன்ற எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது. நான் அரசியலில் 2004-ம் ஆண்டு இணைந்தேன். அப்போது இப்படி எல்லாம் ஒரு எம்.பி. பதவியை பறிப்பார்கள் என நினைத்து கூட பார்க்கவில்லை. ஆனால் அப்படித்தான் நடந்திருக்கிறது தற்போது. ஆனால் எம்பி பதவி பறிப்பு என்பது கூட மக்களுக்கு சேவையாற்ற கிடைத்த தருணமாகவே பார்க்கிறேன். எம்பி பதவி பறிப்பு எனும் நாடகம் 6 மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. ஒட்டுமொத்த எதிர்க்கட்சியினரும் இணைந்து போராடிய தருணம். பாஜக அனைத்து அரசு நிறுவனங்களையும் கைப்பற்றிக் கொண்டது. அதற்கு எதிராக ஜனநாயக சக்திகள் இணைந்து போராடிய போதுதான் பாரத் ஜோடோ யாத்திரை தொடங்கப்பட்டது. நான் யாரிடமும் எதற்காகவும் ஆதரவு கேட்கவில்லை. என்னைப் பொறுத்தவரையில் போராட்டம் என்பது போராட்டம்தான். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உங்களிடத்தில் தெரிவிக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு. இங்கே நான் உங்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறேன். அதேபோல பிரதமர் மோடியும் நாட்டு மக்களுடன் கலந்துரையாட வேண்டும். மக்கள் எழுப்புகிற ஆகக் குறைந்தபட்சம் சில கேள்விகளுக்காவது பிரதமர் மோடி பதில் சொல்லத்தான் வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

முன்னதாக நேற்று கலிபோர்னியா நிகழ்வில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். பாஜக, ஆர்.எஸ்.எஸ். இயக்கங்களையும் சாடினார். கடவுளுக்கே பிரபஞ்சத்தின் இயக்கம் குறித்து பிரதமர் மோடி வகுப்பு எடுப்பார் என்றார். அத்துடன் இந்தியாவில் சிலர் விஞ்ஞானிகளுக்கு அறிவியல் பாடம் நடத்துவர்; ராணுவ வீரர்களுக்கே ராணுவம் குறித்து பாடம் நடத்துவர்; எல்லாம் தெரிந்தவர்கள் என்கிற ஒரு கூட்டம் இந்தியாவை ஆட்சி செய்கிறது எனவும் சாடி இருந்தார்.