ரூ2,000 நோட்டு வாபஸ் வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் அடையாள ஆவணங்கள் இன்றி மாற்றிக்கொள்ளலாம் என்ற அறிவிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டது. அதாவது அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000-ம் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது. அதன்பிறகு புதிதாக ரூ.2 ஆயிரம் ரூபாய் தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டது. துவக்கத்தில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் மத்தியில் அதிகம் புழக்கத்தில் இருந்தாலும் சில ஆண்டுகளில் கணிசமாக புழக்கத்தில் குறைந்தது. அதேபோல், ஏடிஎம்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கொடுப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டது. புதிதாக அச்சடிக்கப்படவும் இல்லை.

இந்த நிலையில், புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த வாரம் அறிவித்தது. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்றும் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் வரை மாற்றிக்கொள்ள எந்த ஒரு ஆவணமும் தேவையில்லை எனவும் வங்கிகள் தெரிவித்தன. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை எந்த ஒரு ஆவணமும் இன்றி மாற்றிக்கொள்ளலாம் என்ற எஸ்.பி.ஐ வங்கியின் அறிவிப்புக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்ட்டது. இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபத்தாய் மேல் முறையீடு செய்தார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு நீதிபதிகள் சுதன்ஷூ துலியா மற்றும் கேவி விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்த நீதிபதிகள் தலைமை நீதிபதியிடம் முறையிடுமாறு மனுதாரரை அறிவுத்தினர்.