மத்திய பாஜக அரசு தமக்கு வழங்க முன்வந்த இசட் பிளஸ் பாதுகாப்பு தேவை இல்லை என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நிராகரித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியானது ஆட்சியைக் கைப்பற்றி பிரதான அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தது. பஞ்சாப் முதல்வராக 49 வயதான பகவந்த் மான் தேர்ந்தெடுக்கப்பட்டார். பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தது முதல் காலிஸ்தான் தனிநாடு கோரும் சீக்கியர் அமைப்புகள் தலையெடுக்க தொடங்கின. இதனால் பஞ்சாப் மாநிலத்தில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் அச்சம் உருவானது. ஆனால் முதல்வர் பகவந்த் மான், காலிஸ்தான் பயங்கரவாதி அம்ரித்பால் சிங் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை தீவிரமாக வேட்டையாடி சிறையில் அடைத்தார். இதனால் காலிஸ்தான் பயங்கரவாதிகள் பகவந்த் மானுக்கு மிரட்டல் விடுத்தனர். அமெரிக்காவில் உள்ள அவரது மகளையும் காலிஸ்தான் பயங்கரவாத கும்பல் மிரட்டியதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில்தான் மத்திய அரசு, ஒரு மாநில முதல்வர் என்ற அடிப்படையில் பகவந்த் மானுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க முன்வந்தது. மத்திய பாஜக அரசின் இசட் பிளஸ் பாதுகாப்பை நிராகரிப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் அனுப்பினார் பகவந்த் மான். அத்துடன், டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் தமக்கு பஞ்சாப் மாநில போலீசாரே பாதுகாப்பு வழங்குவர் எனவும் பகவந்த் மான் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
டெல்லி அதிகாரிகள் நியமனம், மாறுதல் விவகாரத்தில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசின் முதல்வர் கெஜ்ரிவால் இதனை கடுமையாக எதிர்த்து வருகிறார். அத்துடன் ஒவ்வொரு மாநிலமாக சென்று மாநிலங்களின் முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து ராஜ்யசபாவில் மத்திய அரசின் டெல்லி மசோதாவை தோற்கடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இந்த பயணத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பகவந்த் மானும் சென்று வருகிறார். அரவிந்த் கெஜ்ரிவாலும் பகவந்த் மானும் இன்று தமிழ்நாடு வருகை தர உள்ளனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை இரு மாநில முதல்வர்களும் சந்தித்து பேச உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.