சீமான் டுவிட்டர் கணக்கு முடக்கத்திற்கு முக.ஸ்டாலின் கடும் கண்டனம்!

முடக்கப்பட்டுள்ள சீமான் மற்றும் திருமுருகன் காந்தி ஆகியோரின் டுவிட்டர் கணக்குகளை மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். மத்திய மற்றும் மாநில அரசுகளையும் பாரபட்சம் இல்லாமல் விமர்சித்து வருகிறார். இந்நிலையில் சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
சீமான் உட்பட, நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இடும்பாவனம் கார்த்தி, பாக்கியராஜன், விக்கி பார்கவ் உள்பட இருபதுக்கும் மேற்பட்ட நிர்வாகிகளின் டுவிட்டர் கணக்குகளை, இந்தியாவில் தற்காலிகமாக தடை செய்வதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று, சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. திடீரென தங்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது நாம் தமிழர் கட்சியினர் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் டுவிட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

சீமான் மற்றும் திருமுருகன் காந்தியின் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது டுவிட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார். மேலும் கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதுதான் அறம் என்றும், கழுத்தை நெரிப்பது அல்ல என்றும் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், டுவிட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.