மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அனுமதிக்காது: செல்வப்பெருந்தகை!

மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அனுமதிக்காது, மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்ட முயற்சிப்பதை எதிர்ப்போம் என தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு கர்நாடகாவில் சமீபத்தில் பதவியேற்றது. இந்நிலையில் கர்நாடக துணை முதல்வரும் நீர்வளத்துறை அமைச்சருமான டிகே சிவக்குமார், நீர்வளத்துறை அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிகே சிவக்குமார், மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளதாகத் தெரிவித்தார். மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகா காங்கிரஸ் அரசு உறுதியாக இருப்பது தமிழ்நாட்டினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிகே சிவக்குமாரின் பேச்சுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. திமுக அமைச்சர் துரைமுருகன், கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமாருக்கு கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும், கர்நாடகா காங்கிரஸ் அரசின் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அனுமதிக்காது எனக் கூறியுள்ளார். மேலும், மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்ட முயற்சிப்பதை எதிர்ப்போம். தமிழ்நாட்டின் நலனே எங்களுக்கு முக்கியம். மேகதாது அணை வழக்கு உச்ச அநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பையே காங்கிரஸ் தேசிய தலைமை வலியுறுத்தும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.